அதிமுகவில் மாறி மாறி நீக்கும் படலம் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தான் நீக்குவதாக அறிவித்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகத்தில் வைத்து பேட்டியளித்துள்ளார்.
முன்னதாக ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் எடுத்த அதிமுக பொதுக்குழுவில், ஈபிஎஸ் உரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், “நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார். இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கு கொள்ளாத ஓபிஎஸ், அதிமுக தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார். அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. நான் அறிவிக்கிறேன்…. ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்” என்றார்.

தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும், பொதுச்செயலாளர் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். `கட்சி சட்டவிதிகளுக்கு முரணாக பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்’ என ஓபிஎஸ் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM