தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள தட்டார்மடம் பகுதியில் கடந்த பத்து நாள்களாக நாய் ஒன்று வாயில் இரும்புச் சங்கிலியால் சுற்றப்பட்டு, பூட்டு போட்டு பூட்டிய நிலையில் உணவருந்த முடியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் நாயைப் பிடித்து இரும்புச் சங்கிலியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது கடிக்கப் பாய்ந்து வந்துள்ளது. இரண்டு மூன்று நாய்களை நிறுத்தி அழைத்த போதிலும் குரைத்தபடியே அலறி ஓடிச் சென்றுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியினர், சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினரிடம் நாயின் வாயில் இரும்புச் சங்கிலி போடபட்ட விவரத்தைக் கூறியுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த நாய் சுற்றித் திரிந்த பகுதிக்கு வந்தனர். பிஸ்கட்டுகளை வீசி நாயை தங்களின் அருகில் வரவழைத்தனர். அங்கு மீட்புப்பணிக்காக வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொருமே பிஸ்கட்டுகளை தொடர்ந்து வீச, நாய் எங்கும் ஓடிச் செல்லாமல் அவர்களையே சுற்றி வந்தது.
ஆனாலும், அவர்கள் நாயைப் பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பியோடவே நாய் முயற்சித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வலியால் துடித்த அந்த நாயை பிடிக்க முடியவில்லை. தீயணைப்பு வீரர் நின்று கொண்டு நாயின் இரண்டு பின்பக்கக் கால்களைப் பிடித்து தூக்கி வேகமாக இரண்டு சுற்று சுற்றினார். அப்போது மற்ற தீயணைப்பு வீரர்கள், அந்த நாயின் வாயை நைசாக பிடித்தனர்.

அதன் வாயில் சங்கிலியால் இறுக்கமாக சுற்றப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்த அந்தப் பூட்டு மற்றும் இரும்புச்சங்கிலியை கட்டிங் பிளேடால் வெட்டி அப்புறப்படுத்தினர். வாயிலிருந்து பூட்டை அகற்றப்பட்டதால், மகிழ்ச்சியில் முன்னங் கால்களை தூக்கிக் குரைத்தபடியே தீயணைப்பு வீரர்களைச் சுற்றி துள்ளி குதித்து ஓடியது. லாவகமாக நாயின் வாயிலிருந்து பூட்டை அகற்றிய வீரர்களை கூடிநின்ற பொதுமக்கள் கைதட்டி பாராட்டினர்.
”நாய் ஒரு நன்றியுள்ள செல்லப்பிராணி. சிலர், ஆசைக்காக வீடுகளில் குட்டியிலிருந்து நாயை வளர்க்கிறார்கள். பின்னர், தெருக்களில் விட்டுவிடுகிறார்கள். அவை உணவு, தண்ணீருக்காக தெருக்களில் சுற்றித் திரிகிறது. இப்படிப்பட்ட நாய்களுக்கு உணவு வைப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அது உண்மையில் பாராட்டப்படக்கூடியதுதான். அதே நேரத்தில் நாய்களின் வாலில் வெடி வெடிக்க வைப்பது, நாயின் கழுத்தில் பிளாஸ்டிக்குகளை கட்டிவிடுவது, அடித்துத் துன்புறுத்துவது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இது தவறானது. மிகவும் கண்டிக்கத்தக்கது. வாயில் இரும்புச்சங்கிலியால் இறுக்கமாகக் கட்டியதுடன், பூட்டு போட்டு பூட்டியிருப்பது பாவச் செயல்தான். ஆறறிவு மனதர்களை விட நன்றியுள்ள பிராணியை வதைப்பது தண்டனைக்குரியது. இதுபோன்ற பிராணிகளை வதைப்பவர்கள் மீது போலீஸார் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.