வயது, எடை, விருப்பங்கள் பற்றி மிகவும் கலகலப்பாக, இயல்பாகப் பேசுபவர்களுக்குக்கூட தன் வருமானம், செலவு, சேமிப்பு, கடன் இவை பற்றி பிறரிடம் அவ்வளவு இயல்பாகப் பேச முடிவதில்லை. தன் வாழ்க்கைத் துணையிடம் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்துகொள்பவர்கள்கூட பணம் பற்றிப் பேசும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பதுடன், சில சின்னச் சின்ன பொய்களைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள்.
இந்தப் பொய்களுக்குக் காரணம், பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் உணர்வுகள் சம்பந்தப்பட்ட வையாகவும் இருப்பதுதான்.

அமெரிக்காவில் உள்ள செல்ஃப் என்னும் நிறுவனம் 2,600 பேரிடம் எடுத்த சர்வேயில் வெளியான தகவல் என்னவெனில், வாக்குவாதங்களைத் தவிர்ப்பதற்காக அல்லது தன்னை ஒரு வெற்றியாளனாக சித்திரிக்க அல்லது வேறு சில நன்மைகளை அடைய அல்லது சில சூழ்நிலைகளை சமாளிக்க 75.30% அமெரிக்கர்கள் பண விஷயத்தில் பொய் சொல்கிறார்கள் என்பதே.
செல்ஃப் கூறும் தகவல், அமெரிக்கர்கள் பற்றி மட்டுமல்ல பொதுவாக, நம் அனைவருக்குமே பொருந்துவதுதான்.
பணம் பற்றி சொல்லும் பொய்கள்…
பொய் 1 : தான் வாங்கிய ஒரு பொருளின் விலையைக் குறைத்துக் கூறுவது…
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நம்மைவிட சற்று வசதி குறைந்தவர்களிடம் நம் வசதி பற்றிப் பெருமை பேசத் தயங்கும் உயர் எண்ணமாக இருக்கலாம். அல்லது நாம் வசதியானவர்கள் என்பது பிறருக்குத் தெரிவது நல்லதில்லை என்ற ஜாக்கிரதை உணர்வாக இருக்கலாம்.
அல்லது நமக்குத் தேவையற்ற ஒன்றை ஆசைக்காக வாங்கிவிட்டு, “இது தெரிந்தால் பணத்தை அநாவசியமாக செலவழித்தது பற்றி யாரேனும் கடிந்து கொள்ளக்கூடும்” என்பதாலும் இருக்கலாம். இந்தக் குணம் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக, இந்தப் பொய்யைச் சொல்பவர்கள் தங்களின் செலவுப் பழக்கங்கள் பற்றிய குற்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பொய் 2: வாங்கிய பொருளை குடும்பத்தினர் பாராமல் மறைத்து வைப்பது…
சிலர் தேவையற்றப் பொருளை வாங்கி வந்திருந்தால், யாரும் பார்க்காதபடி, அதை மறைத்து எடுத்துச் செல்வார்கள். பிடிபட நேர்ந்தால், “இதுவா? இது ரொம்ப காலமாக நம்முடன் இருக்கும் பொருளாயிற்றே?” என்று அடுத்த பொய்யையும் சேர்த்து சொல்வார்கள். வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் பொருளை வாங்காமல், தனது ஆசைக்கு பொருளை வாங்கிய குற்ற உணர்ச்சியே இதற்குக் காரணம்.
பொய் 3 – வாங்கிய பொருளின் விலையை அதிகரித்துக் கூறுவது…
சிலர், சமூகத்தில் தங்கள் மதிப்பை அதிகரிக்க இந்தப் பொய்யை உபயோகிக்கிறார்கள். காதலர்கள் நடுவே இது அதிகம் காணப்படுகிறது. வருமானம் சற்றுக் குறைவாக இருப்பவர்கள் தங்களது நிதிநிலை வெகுபிரமாதம் என்று சொல்லி பிறரை நம்பவைக்கவும், இந்தப் பொய்யை உபயோகிக்கிறார்கள்.

சம்பளத்தை அதிகமாகச் சொல்வது ஏன்?
பொய் 4 : வேலைக்கான நேர்காணலில் தங்கள் பழைய சம்பளத்தை அதிகரித்துக் கூறுவது…
இதன் மூலம், தங்கள் வேலையின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதுடன், இன்னும் அதிக சம்பளத்துக்கு தன்னை தகுதியாகக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்து, ஆண், பெண் இருவரும் இந்தப் பொய்யைக் கூறுகிறார்கள்.
இது பொய்யல்ல; பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தும் வழி என்று நினைத்து பலரும் இப்படிப் பொய் சொல்கிறார்கள்.
பொய் 5 : வருமானவரி படிவத்தில் தவறான தகவல்கள் தருவது…
`வருமான வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பு; தவறான தகவல்கள் கொடுத்துப் பிடிபட்டால் அதிக அளவு பெனால்டி கட்ட நேரும்’ என்பதெல்லாம் தெரிந்தாலும், சிலர் தங்கள் வருமானத்தை மறைக்க முயல்கின்றனர். இதில் பெண்களைவிட ஆண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். காரணம், பணமீட்டும் நடவடிக்கையில் அதிகம் ஈடுபடுவது அவர்கள்தானே!

மனைவிக்குத் தெரியாமல் கிரெடிட் கார்டு வைத்திருப்பது…
பொய் 6 :வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் ரகசியமாக ஒரு வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பது…
`மில்லென்னியல்ஸ்’ எனப்படும் இன்றையத் தலைமுறை இந்த விஷயத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள். கிரெடிட் கார்டில் அதிகம் கடன் இருப்பது வாழ்க்கைத் துணைக்குத் தெரிய வேண்டாம் என்ற எண்ணமாக இருக்கலாம்.
அக்கவுன்டில் பணம் இருப்பது தெரிந்தால், அடுத்தவர் அதிகம் செலவழிக்கலாம் என்ற பயமாக இருக்கலாம். அல்லது தனியாக ஒரு அக்கவுன்ட் இருந்தால், ஒவ்வொரு செலவையும் ஒப்பிக்க வேண்டாமே என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.
பொய் 7: தனக்கு இருக்கும் கடன் பற்றிய உண்மைத் தொகையை வாழ்க்கைத் துணையிடம் சொல்லாமல் இருப்பது…
“வாழ்வின் தொடக்கத்திலேயே இத்தனை கடனா என்று பயமுறுத்த வேண்டாமே”, “சீக்கிரமே கடனை அடைத்துவிடப் போகிறோம் – எதற்கு வீணான ஒரு வாக்குவாதம்” என்பன போன்ற சமாதானங்களுடன் கூற ஆரம்பித்த இந்தப் பொய், ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போய், மணவாழ்வின் அஸ்திவாரமே ஆட்டம் காணவும் வாய்ப்பு உண்டு.
அதுவும் வாழ்க்கைத் துணையிடம் கூறும் பணப்பொய் பொருளாதார துரோகமாகக் கருதப்படுகிறது. இதைக் கூறுபவர்கள் அநேகமாக அதீத குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இரண்டு விதமான பொய்யர்கள்…
பணம் பற்றிய பொய்களை எந்தக் காரணத்துக்காகச் சொல்ல ஆரம்பித்தாலும், அது சிக்கலில் முடியும் வாய்ப்பு அதிகம். இப்படி பொய் சொல்பவர்களை `பதாலஜிகல் லையர்ஸ்’ (Pathological Liars), `கம்பல்சிவ் லையர்ஸ்’ (Compulsive Liars) என்று இரு விதமாகப் பிரிக்கிறார்கள்.
`பதாலஜிகல் லையர்ஸ்’ என்பவர்கள் பிறரது கவனத்தை ஈர்க்க அல்லது அனுதாபம் மற்றும் உதவியைப் பெற, தெரிந்தே பொய் சொல்வார்கள்.
`கம்பல்சிவ் லையர்ஸ்’களுக்குப் பொய் சொல்ல காரணமே தேவையில்லை. தங்களை அறியாமல் தொடர்ந்து கூறும் பொய்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் நல்வாழ்வுக்கே உலை வைத்துவிடும்.

பொருளாதாரப் பொய்களைத் தொடர்ந்து கூறி வந்தால், தாங்கள் கூறும் பொய்களை நினைவு வைத்து அதற்கேற்றவாறு வாழ்வதே மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
மேலும், பொருளாதாரப் பொய்கள் சட்ட நடவடிக்கைகளுக்கும் வழி வகுக்கலாம். ஆகவே, விளையாட்டாகக்கூடப் பொருளாதாரப் பொய்கள் சொல்லாமல் தவிர்ப்பது நல்லது.