வத்தலக்குண்டு : பலியான காணிக்கை ஆடுகள்… பக்தர்கள் அதிர்ச்சி- நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டிகளை விடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் பக்தர்களால் வழங்கப்படும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி மாதத் திருவிழாவின்போது கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டப்பட்டு அன்றிரவே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

இறந்து கிடக்கும் ஆடுகள்

நிகழாண்டு ஜூலை 17 – ம் தேதி ஆடி மாதத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் ஆட்டுக்குட்டிகளைக் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாகக் கோயில் ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்துக் குதறும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களில் நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் 30 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தோம். ஆடுகளை நாய்கள் கடிப்பது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்கள் கொண்டு வரும் ஆடுகளை வைத்துதான் ஆடி மாதத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

நேர்த்திக்கடனுக்கு விடப்பட்ட ஆடுகள்

கடந்த காலங்களில் கோயில் கிராமத்துப் பொதுமக்கள் வசம் இருக்கும் நேரத்தில் ஆடுகளை முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் சென்றவுடன் ஆடுகளைப் பராமரிப்பதில் அறநிலைய துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே ஆடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் கோயிலை கிராம மக்களிடம் அறநிலையத் துறை ஒப்படைத்து விட வேண்டும்.

நாய்கள் (மாதிரிப் படம்)

நேர்த்திக்கடனுக்காக விடப்படும் ஆடுகள் தொடர்ந்து பலியாவதாகவும் ஆடுகளை மர்ம கும்பல் திருடிச் செல்வதாகவும் குற்றம் சாட்டும் இந்து முன்னணி நிர்வாகிகள் அறநிலைத்துறையைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடந்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆடுகள் பலியான சம்பவம் கோட்டை கருப்பணசாமி கோயில் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கனகாவிடம் பேசினோம். “கோயில் வளாகத்தைத் தூய்மைப்படுத்த 100 நாள் திட்டத்தில் வேலை செய்வோரைப் பயன்படுத்த உள்ளோம். நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் கோயில் வளாகத்திற்கு நுழைய முடியாத அளவுக்கு முழுவதும் கம்பி வேலி அமைக்க உள்ளோம். ஆடுகளுக்குத் தேவையான தீவனங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். உயிரிழந்த ஆடுகளின் இறப்பு குறித்து அறிய கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளோம்” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.