ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கூட்டத்தில் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்படுவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் தாக்கல்செய்ய வேண்டிய வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார். அதன் காரணமாக கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க அ.தி.மு.க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை இருவரையும் கட்சியைவிட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில், கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பி.எஸ் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு-செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். 11-07-2022 அன்று நடைபெற்ற அ.தி.மு.க சட்ட விரோதப் பொதுக்குழுக் கூட்டத்தில், எனக்குப் பதிலாக அ.தி.மு.க பொருளாளராக திரு.திண்டுக்கல் சி.ஸ்ரீனிவாசனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ” என ஓ.பி.எஸ் குறிப்பிட்டிருக்கிறார்.