காரைக்கால்: மாங்கனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கைலாசநாத சுவாமி நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட, காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு விழா நேற்று (ஜூலை 11) மாலை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அலங்காரத்தில் பரமதத்த செட்டியாரை ஊர்வலமாக (மாப்பிள்ள அழைப்பு) அழைத்து வரும் நிகழ்வுடன் தொடங்கியது. இன்று (ஜூலை 12) காலை அம்மையார் மணிமண்டபத்தில் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மையார் குளக்கரைக்கு புனிதவதியார் எழுந்தருளினார்.
பின்னர் திருக்கல்யாண மண்டபத்துக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் பக்தர்களிடம் எடுத்துக் காண்பித்து, பக்தர்கள் முன்னிலையில் காலை 11 மணிக்கு அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். அப்போது மணிமண்டபத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் அம்மையாரை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. அம்மையார் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு சிறப்பு எனக் கருதப்படுவதால் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு இறைவனை தரிசித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏஎம்எச் நாஜிம், பிஆர்என் திருமுருகன், எம்நாக தியாகராஜன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) அருணகிரிநாதன், தேவஸ்தான அறங்காவல் வரியத் தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண வைபவத்துக்குப் பின்னர் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நாளை பிச்சாண்டவர், பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை, பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத்தெரு பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில்) வருதல், விழாவின் சிறப்பு மிக்க நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
மாலையில் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி அம்மையார் கோயிலில் நடைபெறும்.