பாட்னா: வீடியோ கேம் விளையாடுவதற்காக தனது செல்போனை பயன்படுத்திய நண்பர்கள், மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று கைதான இளைஞன் பீகார் போலீசிடம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த அர்மான் அலி என்பவரை பைகுந்த்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். உள்ளூர் பாஜக தலைவர் ஷம்பு நாராயண் சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்ட இளைஞர் தனக்கு செல்போன்களை இயக்க தெரியாது என்றும், அப்படி இருக்கையில் நான் எவ்வாறு அவதூறு பதிவை வெளியிட முடியும் என்று கூறினார். மேலும் போலீசாரிடம் அர்மான் அலி அளித்த வாக்குமூலத்தில், ‘எனது நண்பர்கள் செல்போனில் கேம் விளையாடுவதற்காக எனது செல்போனை கேட்டனர். அதற்காக எனது செல்போனை அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவேற்றியிருக்கலாம்’ என்று கூறியதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
