அமெரிக்கா: அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரத்தில் கொசு வலைகளில் 14 மணி நேரத்தில் 11 ஆயிரம் கொசுக்களை சிக்கியதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போய் உள்ளனர்.
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள பெரிய நகரம்தான் போர்ட்லாந்து. இந்த நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் கொலம்பியா ஆற்றில் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக இந்தப் பகுதியில் கொசுக்களைப் பிடிக்க வலைகள் வைக்கப்படுவது வழக்கம். இதன்படி சில நாட்களுக்கு முன்பு இந்தக் கொசு வலைகள் மூலம் 14 மணி நேரத்தில் 11 ஆயிரம் கொசுக்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நகரத்தின் அதிகாரி கூறுகையில், “எனது பணிக் காலத்தில் இந்த அளவுக்கு கொசுக்களை பிடித்தது இல்லை. கடந்த ஆண்டுகளில் ஒரு வலையில் நூறு கொசுக்கள் மட்டுமே பிடிக்கப்பட்டது. தற்போது ஒரு வலையில் 14 மணி நேரத்தில் 11 ஆயிரம் கொசுக்கள் பிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மாவட்ட கொசு கட்டுப்பாட்டு அதிகாரி, கடந்த ஜூன் 20ம் தேதி கொசு கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்ள கோரி பொதுமக்களிடம் இருந்து 300க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறினார். 2010ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத, மிகவும் மேசமான அளவுக்கு கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அந்த நகரத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மிகவும் தாமதமாக பெய்த மழை காரணமாக கொசுக்கள் அதிக அளவு குஞ்சு பொறித்ததுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.