இலங்கை அதிபர் தேர்தல்; சஜித் உட்பட 4 பேர் போட்டி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு-இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.

latest tamil news

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் ஆவேச போராட்டம் காரணமாக சிங்கப்பூருக்கு தப்பியோடினார். அங்கிருந்து, இரு தினங்களுக்கு முன் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அதிபர்இதையடுத்து, புதிய அதிபர் தேர்வு குறித்து ஆலோசிக்க, நேற்று பார்லிமென்ட் கூடியது.

அப்போது, பார்லி., செகரட்டரி ஜெனரல் தம்மிகா தசநாயகே, அதிபர் பதவி காலியாக உள்ளதாக அறிவித்தார்.புதிய அதிபர் தேர்வுக்கு, 19ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், 20ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்ர மசிங்கே, அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரைத் தவிர, அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பார்லி.,யில் எம்.பி.,க்கள் யாரும் இல்லை. அதேசமயம் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவு அவருக்கு உள்ளது.

எனினும், அக்கட்சியின் அதிருப்தியாளர் அலகபெருமா, அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆளும் கட்சி எம்.பி.,க்களின் முழு ஆதரவு கிடைக்காத நிலை உள்ளது.இதற்கிடையே, அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் திசநாயகே அறிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதம்அடுத்து பிரதான எதிர்க்கட்சியான, சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.இதனால், அதிபர் தேர்தலில் நான்கு பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

latest tamil news

இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகிய கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் நேற்று பார்லிமென்டில் வாசிக்கப்பட்டது.அதில் அவர் கூறியுள்ளதாவது:நான் அதிபராக பதவியேற்பதற்கு முன்பே, இலங்கையில் நிதிநெருக்கடி இருந்தது.தவறான பொருளாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதே இதற்கு காரணம். அதிபராக பதவியேற்றதும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன்.

அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய அரசை அமைப்பது உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். தாய் நாட்டுக்காக முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றினேன். எதிர்காலத்திலும் நாட்டுக்காக சேவையாற்றுவேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.