நாட்டின் முதல் குடிமகனால் என்ன செய்ய முடியும்… பாய்ந்தால் புலி

நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது. ஜனநாயகமும், அரசியலமைப்பும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், அவற்றை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்புடைய நாட்டின் முதல் குடிமகனுக்கு, என்ன மாதிரியான அதிகாரங்கள் உள்ளன, அத்தகைய அதிகாரங்களை முந்தைய ஜனாதிபதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தி உள்ளனர் என்பதைப் பற்றி பார்ப்போம்… உலகின் பிற நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் ஜனாதிபதி பதவி மிகவும் வித்தியாசமானது. அவர்களுக்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை பயன்படுத்த முடியாது. சுருக்கமாக சொன்னால், ‘இருக்கு… ஆனா இல்ல’ என்கிற கதைதான். அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுபவராக மட்டுமே ஜனாதிபதிகள் காட்டப்படுகின்றனர். ‘ஆட்சி செய்யவோ, நிர்வாகம் செய்யவோ இயலாத ஒரு தலைவன்’ – இப்படித்தான் ஜனாதிபதி பதவி குறித்து நாட்டின் முதல் பிரதமரான நேரு குறிப்பிட்டுள்ளார். இதனால், ஜனாதிபதி என்பவர் வெறும் அரசின் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே இருக்க வேண்டுமா? என்று கேட்டால், ‘நிச்சயமாக இல்லை…’ என்பதே பதிலாக இருக்கும்.* உண்மையிலேயே அதிகாரங்கள் இல்லாதவராக இருந்தாலும், ஓர் ஜனநாயக பாதுகாவலராக, அரசியலமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் மதிப்புகளை ஜனாதிபதியால் செழுமைப்படுத்த முடியும். * மக்களின் எண்ணத்தையும், உண்மையான பிரச்னையையும், கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்பவராகவும், பெரும்பான்மை வகிக்கும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கான கடைசி ஆபத்பாந்தவனமாகவும் இருக்க முடியும். * சமூக பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை உடனடியாக திசை திருப்ப வேண்டிய ஒரு முக்கிய நபர் ஜனாதிபதியே. * எந்த ஒரு விஷயத்திற்காகவும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரை நேரில் அழைத்து மக்கள் குறைகளை தெரிவித்து, அரசாங்கத்தை முடுக்கிவிடும் அதிகாரம் படைத்தவர். * மக்களையும் சமூகத்தையும் பாதிக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தடுக்கக் கூடிய சக்தி படைத்தவரும் அவரே. இதுபோன்ற அதிகாரங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்தி, கட்சி வேறுபாடு இன்றி, அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு செயல்பட்ட ஜனாதிபதிகள் பலர் இப்பதவியை அலங்கரித்துள்ளனர். ஜனாதிபதி உறுதியான, பாரபட்சமான முறையில் செயல்படும்போது என்ன நடக்கும்? இது வெறும் அலங்காரப் பதவியல்ல என்பதை சில ஜனாதிபதிகள் நிரூபித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத்: நாட்டின் முதல் ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர். இப்பதவியை தொடர்ந்து 2 முறை வகித்தவரும் இவர் மட்டுமே. பெரும்பான்மை பலம் கொண்ட அரசு ஆட்சியில் இருந்தாலும் ஜனாதிபதியை ஆட்டிப்படைக்க முடியாது என்பதை உணர்த்தியவர். இவர், 1947களில் பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நிறைய மாற்றுக் கருத்துகளை கொண்டிருந்தார். பிரதமர் நேருவுடன் சுமூக உறவை கொண்டிருக்கவில்லை. சில சமயங்களில் பொது அறிக்கைகள் மூலம் அரசை விமர்சித்தார்.ஜெயில் சிங்: 1984ல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்த போது, அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, நாட்டின் 7வது ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங், ராஜிவ் காந்தியை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ‘காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை நான் காத்திருக்க வேண்டியதில்லை. நெருக்கடியான சூழலில் பிரதமரை நியமிக்கும் தடையில்லா உரிமையும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு’ என தனக்கான அதிகாரத்தை சுட்டிக் காட்டினார். அதே சமயம், ராஜிவ் காந்தியுடன், ஜெயில் சிங் நிறைய கருத்து வேறுபாடுகளையும் கொண்டிருந்தார். 1987ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த மசோதா பின்னர் அரசால் வாபஸ் பெறப்பட்டது. 1994ல் காலமான ஜெயில் சிங், ஆயுத கொள்முதல் ஊழல் புகாரில் ராஜிவ் காந்தியின் அரசை பதவி நீக்கம் செய்ய நினைத்தாகவும் பின்னர் தகவல்கள் வெளியாகின.சங்கர் தயாள் சர்மா: ஒன்பதாவது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவும் 1996ல் இரண்டு நிர்வாக உத்தரவுகளை அமைச்சரவைக்கு திருப்பி அனுப்பி வைத்தார். கே.ஆர்.நாராயணன்: அடுத்து வந்த தலித் தலைவர் கே.ஆர்.நாராயணன், இந்தியாவின் மிகவும் உறுதியான ஜனாதிபதிகளில் ஒருவராக புகழப்பட்டார். அரசின் அனுமதி இல்லாமல் பல அறிக்கைகளை வெளியிட்டார். மரபுகளை மீறி, மூத்த பத்திரிகையாளருக்கு சிறப்பு பேட்டியும் அளித்தார். உபி.யில் நேரடி ஆட்சியை திணிக்கும் அமைச்சரவையின் முடிவை திருப்பி அனுப்பினார். அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து, இந்தியா உடனான உறவை வளர்த்தார். பொதுவாக வெளிநாட்டு தலைவர்களை பிரதமர்களே சந்திப்பது வழக்கம். அதை உடைத்தெறிந்து இந்தியாவின் வெளியுறவை வலுப்பட செய்தார்.பிரணாப் முகர்ஜி: நாட்டின் 13வது ஜனாதிபதியான காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி, கட்சிப் பாகுபாடின்றி திறம்பட செயல்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் கூட நிறைய மாற்றுக் கருத்தை கொண்டிருந்தார். பல விஷயங்களில் அவர் தனது அதிருப்தியை மூத்த அமைச்சர்களிடம் வலுவாக தெரிவித்தார். அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் அரசாங்கம் செயல்பட வேண்டுமென தனிப்பட்ட முறையிலும் எழுத்துப்பூர்வமாகவும் எச்சரித்துள்ளார். மேலும், அவசர சட்டங்கள் மூலமாக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான வழியை நாட வேண்டாம் என்று அவர் கடுமையாக அறிவுறுத்தினார். – இவை, ஒரு சில உதாரணங்களே… இப்படியாக, நடுநிலையுடன் செயல்திறன் மிக்க, ஜனநாயகத்தை காக்கும் ஜனாதிபதிதான் இன்றைய தேதிக்கு இந்தியாவிற்கு அவசிய தேவையாக உள்ளது. எனவே, ஜனாதிபதி போட்டியில் உள்ள ஆளுங்கட்சியின் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆகிய இருவரில் யார் வென்றாலும் கட்சிப் பாகுபாடின்றி, நடுநிலையோடு ஜனநாயகத்தை காக்கும்படி நடக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.* மக்கள் ஜனாதிபதிநாட்டின் 11வது ஜனாதிபதியான தமிழகத்தின் ஏ.பி.ஜே அப்துல்கலாம் இந்தியாவின் மிகப் பிரபலமான ஜனாதிபதியாக இருந்தார். இவர் மக்களின் ஜனாதிபதி என போற்றப்பட்டார். ஜனாதிபதி மாளிகையின் ஆடம்பரங்களை உதறித் தள்ளி அங்கும் எளிமையாக வாழ்ந்தார். கலாம் பதவிக்காலத்தில், அப்போதைய காங்கிரஸ் அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதி அதை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை என்ற ரீதியில் இந்தச் சட்டத் திருத்தம் இருந்தது. மேலும், 2 முறை தண்டனை பெற்ற அரசியல்வாதியை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் தேர்தல் கமிஷனின் விதிமுறையையும் இந்தச் சட்டம் தளர்த்தியது. இதற்கு ஒப்புதல் அளிக்க கலாம் மறுத்து திருப்பி அனுப்பினார். ஆனால், 2வது முறையாக எந்த திருத்தமும் இன்றி ஒன்றிய ஒன்றிய அரசு அதே சட்டத்தை அனுப்பியதால் வேறுவழியின்றி ஒப்புதல் அளித்தார்.* நீட்டிய இடத்தில் கையெழுத்துஆளும்கட்சிக்கு எந்த எதிர்ப்பும் காட்டாத ஜனாதிபதி இருந்தால் எத்தகைய பாதிப்பு வரும் என்பதற்கு 1975ம் ஆண்டு சாட்சி. அப்போது, நாட்டின் அவசரநிலையை பிரகடனப்படுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஜனாதிபதி பக்ரூதின் அலியிடம் அனுமதி கோரினார். இதற்கு ஜனாதிபதி எந்த எதிர்ப்பும் காட்டாமல் உடனடியாக அனுமதி தந்தார். இது ஜனாதிபதிகளின் மிகவும் அதிருப்திகரமான செயல்பாடாக இன்றளவும் பேசப்படுகிறது. 1992 முதல் 1997 வரை ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள் சர்மா, ‘‘ஒவ்வொரு நாளும் அரசின் செயலாளர்கள் ஆவணங்களை கொண்டு வருகிறார்கள். நீட்டிய இடத்தில் கையெழுத்து போடச் சொல்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது என படித்து பார்க்கக் கூட நேரம் தருவதில்லை’’ என நொந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.* 1977ல் நடந்த ருசிகரம்இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் 115 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால், மனு பரிசீலனைக்கு பிறகு இறுதியில் களத்தில் இருப்பது என்னவோ, ஆளுங்கட்சி வேட்பாளர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவும் மட்டும்தான். ஜனாதிபதி தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றாலும் கூட, சமீபகாலமாக இத்தேர்தல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான 2 வேட்பாளர்கள் மோதும் தேர்தலாகவே உள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் நிலைமை அப்படியில்லை.* 1977ல், 7வது தேர்தலில் அந்த ருசிகர சம்பவம் நடந்தது. 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 36 பேரின் மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான தேதி முடிந்ததும், நீலம் சஞ்ஜீவ ரெட்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வரலாற்றில் இதுபோல போட்டியின்றி எந்த ஜனாதிபதியும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.* 1997க்குப் பிறகு டெபாசிட் கட்டணம் உயர்வு, பல்வேறு விதிமுறைகள் காரணமாக 2 பேர் மட்டுமே போட்டியிடும் தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் மாறி உள்ளது.* இந்தியாவில் முதல் முதலில் 1952ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போது 16வது ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.* ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.* மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த 543 எம்பிக்களும், மாநிலங்களவையின் 233 எம்பிக்களும் உட்பட 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதியானவர்கள்.* ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரூ.2,500 ஆக இருந்த டெபாசிட் தொகை 1997ல் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது வரையிலும் இது தொடர்கிறது.* எந்த கட்சிகளும் தங்கள் எம்பி, எம்எல்ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது எம்பி, எம்எல்ஏக்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.* வாக்குப்பதிவு மையத்தில் தரப்படும் பிரத்யேக பேனா மூலமாக மட்டுமே வாக்கை பதிவு செய்ய வேண்டும்.* நியமன எம்பிக்கள் வாக்களிக்க தகுதியில்லை.* மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் எம்பி, எம்எல்ஏக்களின் ஓட்டுகளுக்கு மதிப்பு தரப்படும். அந்த வகையில் மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10.80 லட்சமாகும்.என்னென்ன அதிகாரங்கள்?* நாட்டின் அனைத்து விவகாரங்களும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.* நாடாளுமன்றத்தின் 2 அவைகளிடையே ஏதாவது சட்டரீதியான பிரச்னை உருவானால் இரண்டு அவைகளையும் கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர்.* பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் சாசன ரீதியான உயர் நிலைப் பதவிகளை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் கொண்டவர்.* நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகே புதிய சட்டமாக நடைமுறைக்கு வரும்.* ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் என்ற பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. முப்படைகளின் தளபதிகளை ஜனாதிபதியே நியமிப்பார்.* இதர நாடுகளுடனான உறவுகளைப் பேணக் கூடியவர் ஜனாதிபதி. வெளிநாட்டுக்கான இந்திய தூதர்கள் அனைவரும் அவரின் பிரதிநிதிகளாக வெளிநாட்டில் வலம் வருகின்றனர்.* குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கவும், மாற்றவும், நிறுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. தூக்குத் தண்டனையை மாற்றி குற்றவாளிக்கு கருணை அளிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.