பெங்களூரு : ”பா.ஜ.,வில் 60 சதவீதம் மாற்று கட்சியினர் தான் உள்ளனர். உண்மையான தொண்டருக்கு மதிப்பில்லை. இதை கூட்டணி அரசு என்று தான் சொல்ல வேண்டும்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று அவர் கூறியதாவது:மத்திய புலனாய்வு அமைப்புகளையும், அரசியலமைப்பு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்தி, தனது அரசியல் எதிரிகளை துன்புறுத்திய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.ராகுல் அல்லது சோனியாவுக்கு எதிராக மோடி அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
வரும் 21-ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திர பூங்காவில் இருந்து ராஜ்பவனை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக செல்வர். கைதுக்கோ, போலீஸ் தடியடிக்கோ பயப்படாமல் கட்சியினர் அனைவரும் சுதந்திர பூங்காவுக்கு வர வேண்டும். இதுபோன்று, அந்தந்த மாவட்ட காங்கிரசார், வரும் 22ம் தேதி போராட்டம் நடத்துவர்.ஆகஸ்ட் 1 முதல் 10ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் துாரம் பாதயாத்திரையும்; ஆகஸ்ட் 15ம் தேதி பெங்களூரு சங்கொல்லி ராயண்ணா சதுக்கத்தில் இருந்து பசவனகுடி வரை தேசிய கொடியுடன் அணிவகுத்து, பசவனகுடியில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்தப்படும்.பா.ஜ.,வில் உண்மையான தொண்டர்கள் இல்லை. மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் தான் உள்ளனர்.
தற்போது நடப்பதை கூட்டணி அரசுதான் எனக் கூற வேண்டும். மாற்று கட்சியில் இருந்து வந்த பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். தற்போது பா.ஜ.,வில், ஜனதா தளத்தில் இருந்து சென்றவர்கள், 35 சதவீதம் பேரும்; காங்கிரசில் இருந்து சென்றவர்கள், 30 பேரும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் மட்டுமே உண்மையான, அடிப்படை பா.ஜ.,வினர்.அக்கட்சியில் பல உட்கட்சி பூசல் உள்ளது. அதனால் தான் தேசிய தலைவர்கள் அவ்வப்போது வந்து பிரச்னையை தீர்த்து வைக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement