குப்பை வண்டியில் மோடி, யோகி படம்: மாநகராட்சி ஊழியர் டிஸ்மிஸ்

மதுரா: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியை தள்ளிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அந்த வீடியோவை எடுத்தவர்கள், அந்த தொழிலாளியை நிறுத்துமாறு கூறுகின்றனர். பின்னர் குப்பை வண்டியில் இருந்து பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியவர்களின் உடைந்து போன புகைப்படங்களை எடுத்து காட்டுகின்றனர்.அதைப் பற்றி அந்த நபரிடம் அவர்கள் கேட்ட போது, ‘‘எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. இவை குப்பையில் கிடந்தன. அதனால் நான் அவற்றை குப்பை வண்டியில் எடுத்து அப்புறப்படுத்த கொண்டு செல்கிறேன்’’ என்கிறார். அதைக் கேட்ட அந்த நபர்கள், புகைப்படங்களை தண்ணீரால் கழுவி, ‘‘இவற்றை நாங்களே கொண்டு செல்கிறோம். மோடியும், யோகியும் இந்த நாட்டின் ஆன்மாக்களாக இருப்பவர்கள்’’ என்கின்றனர்.இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட தொழிலாளியை பணிநீக்கம் செய்திருப்பதாக மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.