சென்னை: சாலையில் உள்ள பள்ளங்களால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துசெல்ல தாமதம் ஆகவதாக ஆம்புலன்ஸ் வாகன ஒட்டுநர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் நாம் தினசரி வெளியே சென்று விட்டு திரும்பும்போது சாலையில் பள்ளங்கள் தோண்டி இருப்பதை பார்க்காமல் வீடு திரும்ப முடியாது. அந்த அளவு சென்னையில் ஏதாவது துறையில் சார்பில் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தப் பள்ளம் காரணமாக ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி நகர முடியாமல் தவிப்பதை சென்னைவாசிகள் பலரும் கவனித்திருப்பர். சென்னையில் தற்போது பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருதால் பல சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ வாகனங்கள் தாமதம் ஆவதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி 5 கி.மீ., துாரத்தை 10 நிமிடத்திற்கு முன்னதாக செல்லும் அரசின் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவையின் நேரம் தற்போது அதிகரித்துள்ளது. இதன்படி சாலையில் உள்ள பள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையில் பிரதான சாலை முதல் உட்புற சாலை வரை பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 4,070.10 கோடி ரூபாய் செலவில், 1,033.15 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் சுரங்க தோண்டும் பணி, மின்சார வாரிய கேபிள் புதைத்தல் பணிகள் உள்ளிட்டவையும் நடைபெறுகின்றன. சென்னையின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னை மாநகரில் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, உடனடியாக சாலையை பயன்படுத்தும் வகையில் சீரமைக்கப்படுகிறது. அதேபோல், மாநகரை கட்டமைக்கும் வகையில், மெட்ரோ ரயில், மின்சார வாரியம் உள்ளிட்ட சேவை துறை பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், ஆம்புலன்ஸ் தாமதமாவதை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. விரைந்து சாலையை சீரமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர்கள் கூறினர்.