மும்பை: ரஷ்யாவிடம் இருந்து ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுககு ஏற்றுமதி செய்து கூடுதல் லாபம் ஈட்டி வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 46 சதவீதம் உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.
குறிப்பாக தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மே மாதத்தில் 10.81 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.
இதனை ரிலையன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறைமுகத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒட்டுமொத்த கச்சா இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு ஐந்தில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாயும் பெருகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு மற்றும் சில்லறை விற்பனை பிரிவுக அதிகமான லாபம் ஈட்டியுள்ளது. அந்நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 46 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூ.1,61,715 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 72% ஆகும். கடந்த மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈட்டிய ஒவ்வொரு ரூ.10 ரூபாய் லாபத்திலும் ரூ.7 பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு கணக்கீட்டின்படி 17.7% அதிகரித்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.