குடியரசுத் தலைவர் முர்முவுக்காக சந்தாலி புடவை, அதிரசம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் முர்முவுக்காக ஒடிசாவில் இருந்து சந்தாலி புடவை, அதிரசம் ஆகியவற்றை உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு. இத்தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் லஷ்மண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இளைய மகன் ஷிபு விபத்தில் காலமானார். கடந்த 2014-ல் கணவர் ஷியாம் சரண் முர்மு மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஒரே மகள் இத்தீ, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். அவரது கணவர் கணேஷ். மகள், மருமகனுடன் ஒடிசாவின் ரைராங்பூரில் திரவுபதி முர்மு வசித்து வந்தார். பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முர்மு டெல்லியில் குடியேறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவரது மகளும், மருமகனும் பங்கேற்கின்றனர். முர்முவின் தம்பி தாரின்சன், மனைவியோடு விழாவில் கலந்து கொள்கிறார். இருவரும் விமானத்தில் டெல்லி சென்றடைந்துள்ளனர்.

தாரின்சனின் மனைவி சுக்ரி கூறும்போது, ‘‘எனது அண்ணி திரவுபதி முர்வுக்காக சந்தாலி பழங்குடியினரின் பாரம்பரிய புடவை, எங்கள் ஊர் தின்பண்டமான அரிசா பிதா (அதிரசம்) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளேன். பதவியேற்பு விழாவில் எங்களது சந்தாலி புடவையை அண்ணி அணிய வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.