அக்சர் படேல் அதிரடி அரைசதம்; தொடரை வென்றது இந்திய அணி| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: இரண்டாவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் விளாசிய சதம் வீணானது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது. இது, விண்டீசின் ஷாய் ஹோப் பங்கேற்ற 100வது ஒருநாள் போட்டியானது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவேஷ் கான் அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பூரன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

ஹோப் நம்பிக்கை:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது தீபக் ஹூடா ‘சுழலில்’ மேயர்ஸ் (39) சிக்கினார். அடுத்து வந்த ஷமர் புரூக்ஸ், தீபக் ஹூடா, அக்சர் படேல் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அசத்திய ஹோப், யுவேந்திர சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது அக்சர் படேல் பந்தில் புரூக்ஸ் (35) அவுட்டானார். சகால் ‘சுழலில்’ சிக்கிய பிரண்டன் கிங் ‘டக்-அவுட்’ ஆனார்.

பூரன் அரைசதம்:

பின் இணைந்த ஷாய் ஹோப், கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. தீபக் ஹூடா, சகால் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட பூரன், 60 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது ஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ பூரன் (74) போல்டானார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹோப், 100வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய 10வது சர்வதேச வீரர் ஆனார். தொடர்ந்து அசத்திய ஷர்துல் தாகூர் பந்தில் ராவ்மன் பாவெல் (13), ஷாய் ஹோப் (115 ரன், 3 சிக்சர், 8 பவுண்டரி) வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்தது. ஷெப்பர்டு (15), ஹொசைன் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

ஷ்ரேயாஸ் அபாரம்:

சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தவான் (13), சுப்மான் கில் (43) சுமாரான துவக்கம் தந்தனர். சூர்யகுமார் யாதவ்(9 ரன்) நிலைக்கவில்லை. அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (63), சஞ்சு சாம்சன் (54) பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா (33) சற்று ஆறுதல் அளித்தார். ஷர்தல் தாக்கூர்(3), ஆவேஷ் கான்(10) ஏமாற்றினர்.

latest tamil news

அக்சர் சிக்சர் மழை:

ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடி ஆட்டம் ஆடிய அக்சர் படேல் அரைசதம் விளாசினார். 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 35 பந்தில் 64 ரன் விளாசிய அக்சர், கடைசி வரை அவுட் ஆகாமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். 49.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றது. ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். கடைசி ஒருநாள் போட்டி 27ம் தேதி நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.