உத்தர கன்னடாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படுமா?| Dinamalar

பெங்களூரு ; உடுப்பி சிரூர் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகி, நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், உத்தர கன்னடாவில் விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட முதல்வரிடம் விவாதிப்பதாக, சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.உத்தர கன்னடாவில் 11 தாலுகாக்கள் உள்ளன. 15.46 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

கார்வார் மருத்துவ அறிவியல் மையம் செயல்பட்டு வந்தாலும், போதிய மருத்துவ வசதி இல்லை.இம்மாவட்ட மக்கள், நீண்ட காலமாக போதிய சுகாதார உள்கட்டமைப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்கள், மருத்துவ சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களுக்கு அல்லது அண்டை மாநிலத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இந்நிலையில், ஜூலை 20ம் தேதி உத்தர கன்னடாவின் ஹொன்னாவரை சேர்ந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க, உடுப்பியின் குந்தாபூருக்கு ஆம்புலன்ஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது.சிரூர் சுங்கச்சாவடி அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், நோயாளி உட்பட உறவினர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, ‘நோ ஆஸ்பிடல்; நோ வோட்’ – மருத்துவமனை இல்லை என்றால், ஓட்டு இல்லை’ என்ற ஹேஸ்டேக், டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சிவானந்த குட்டர்கார் கூறியதாவது:மாவட்டத்தில் தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. ஆனால் நமக்கு தேவை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அல்லது அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் கிளை.அங்கோலாவில் இம்மருத்துவமனை அமைந்தால், மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் வந்து செல்ல வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்டத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது குறித்து, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:

மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகள் உள்ளன.அவசர சிகிச்சை தேவைப்படும் மக்கள் பெங்களூரு, மங்களூரு, மைசூரு அல்லது பெலகாவி போன்ற இடங்களுக்கு விரைந்து செல்ல வேண்டும்.இது, சுகாதார பாதுகாப்பில் பாகுபாடு காட்டுவதாகும். கொரோனாவி-ன் போது, அனைத்து மருத்துவமனைகளும் மேம்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இன்னும் எத்தனை பேர் சாலையில் இறக்க வேண்டுமோ?இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், ‘டுவிட்டரில்’ சுகாதார துறை அமைச்சர் சுதாகர் கூறியிருப்பதாவது:உத்தர கன்னடாவில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அறுவை சிகிச்சை மையம் அமைப்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அத்துடன் மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.