ஐய்ஸ்வால்: ரூ.1.37 கோடி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ மற்றும் 12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் கடந்த 2013 முதல் 2018ம் ஆண்டு வரை உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியும், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. அந்த வகையில் ரூ.1.37 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேற்கண்ட புகாரில் சிக்கியவர்களில் மிசோரம் மாநிலத்தின் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான புத்த தன் சக்மா மற்றும் 12 தலைவர்கள் அடங்குவர். ஊழல் புகார் தொடர்பாக மிசோரம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வன்லாலென்மாவியாவால், குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ புத்த தன் சக்மா மற்றும் 12 பேருக்கு எதிராக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது. அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 30 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ததால், நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் ஜாமீனில் விடுவித்தது.
