பெரெய்லி: கேரளாவில் சமீபத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியது. வயநாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் பன்றிகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் இந்த நோய் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பன்றிகள் இறந்து வருகின்றன. மேலும், நோய் மேலும் பரவுவதை தடுக்க பன்றிகளை கொல்லும் நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் இந்த காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. பெரெய்லி மாவட்டத்தில் பரித்பூரில் உள்ள பண்ணையில் 20 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. அவற்றை பரிசோதனை செய்ததில், அவை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் இறந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றி இறைச்சிகள் விற்கவும், பன்றி சந்தைகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் இந்த நோய் பரவ தொடங்கி இருப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு உஷார்படுத்தி இருக்கிறது.
