‘செஸ்’போட்டியில் வென்ற 152 அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பு விமானத்தில் இலவசப் பயணம்!

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காக, தமிழகஅரசு ஒட்டி தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் வெற்றிபெற்ற  152 மாணவர்கள்  சிறப்பு விமான மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு வரை அழைத்து செல்லப்பட்டனர்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். இதன் தொடக்க விழா நாளை (28ந்தேதி பிற்பகல்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில், செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

முன்னதாக,  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக மாணவர்களிடம்  விழிப்புணர்வும், ஆர்வத்தையும் ஏற்படுத்த பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரை யாட ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் பங்கேற்று விளையாடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 1 – 5 வகுப்புகள், 6 – 8 வகுப்புகள், 9 -10 வகுப்புகள், 11 – 12 வகுப்புகள் என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

இதையடுத்து இந்த சதுரங்கப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெற்றிபெற்ற 152 மாணவர்கள் இன்று(ஜூலை 27) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமானநிலையம் அழைத்துவரப்பட்டு, சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த விமானம் மாலை 4.30 மணியளவில் மீண்டும் சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேரும்.

விமானத்திற்குள்ளும் சதுரங்கப்போட்டி: விமானத்தில் செல்லும் மாணவ,மாணவிகள் விமானத்தினுள் சிறப்பு சதுரங்கப் போட்டி விளையாடிக் கொண்டே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அமைச்சர்கள் விருது வழங்க உள்ளனர்.

முன்னதாக பள்ளி மாணவர்கள் செல்லும் சிறப்பு விமானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.