போதை பொருள் பயன்படுத்தியதால் கார் விபத்து காதலனுடன் நடிகை கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, மலையாள நடிகை அஸ்வதி பாபு, காதலனுடன் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு (26). ஏராளமான மலையாள படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2018ல் அஸ்வதி பாபு தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. தவிர அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைக்கு அடிமையான நடிகை அஸ்வதி பாபு, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அஸ்வதி பாபு உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். வெளியே வந்த பிறகு அஸ்வதி பாபு, போதை பொருளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகை அஸ்வதி பாபு, காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல அந்த கார் அதிவேகத்தில் பாய்ந்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் சிலர் அந்த காரை விரட்டினர். ஒரு வாலிபர் பைக்கில் துரத்தி சென்று காரை வழிமறித்தார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை வேகமாக இயக்கியபோது, கல்லில் டயர் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நடிகை அஸ்வதி பாபுவும், நவுபலும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்தது திருக்காக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் இருவரும் மறைவான இடத்தில் பதுங்கினர். சுதாரித்து கொண்ட போலீசார், இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர். இருவரும் போதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் 2 பேரும் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.