சிங்கப்பூர்:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ‘விசா’வை, மேலும், 14 நாட்களுக்கு நீட்டித்து சிங்கப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் மக்கள் போராட்டத்தால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் ஆசிய நாடான மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவருக்கு, 14 நாட்கள் விசா வழங்கியது சிங்கப்பூர் அரசு.இந்நிலையில், அவருடைய விசா மேலும், 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆக., 14 வரை அவர் சிங்கப்பூரில் தங்கியிருக்கலாம். முதலில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சே, தற்போது ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வெளியே வரவில்லை.கோத்தபய ராஜபக்சே எந்த நேரத்திலும் இலங்கைக்கு திரும்புவார் என, அந்நாட்டின் அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான பந்துலா குணவர்த்தனே கூறியிருந்தார். இந்நிலையில், கோத்தபயவின் விசாவை சிங்கப்பூர் நீட்டித்துள்ளது.
பிரதமர் எச்சரிக்கை
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனே, அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று கூறியதாவது:போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் கருத்துக்களை கேட்க அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. வன்முறை ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து.இவ்வாறு அவர் கூறினார்.
தடை நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவருடைய சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை, ஆக., 2 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement