புதுடெல்லி: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 72 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. அதானி நிறுவனம் தனிப் பயன்பாட்டுக்காக இந்த ஏலத்தில் கலந்துகொள்கிறது.
மற்ற மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவ்வாண்டு இறுதி அல்லது 2023 மார்ச்சுக்குள் 5ஜி சேவையை பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலத்துக்கான வைப்பு நிதியாக ஜியோ ரூ.14,000 கோடி,ஏர்டெல் ரூ.5,500 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.2,200 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி அளவில் செலுத்தியுள்ளன.
குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் ஆகியவை குறைந்த அதிர்வெண்வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 3,000 மெகாஹெர்ட்ஸ் நடுத்தர அதிர்வெண் கீழும், 26 ஜிகாஹெர்ட்ஸ் உயர் அதிர்வெண் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிறுவனங்கள், அலைக்கற்றைக்கான தொகையை மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின்போது அவ்வாண்டுக்கான தொகையை செலுத்திக்கொள்ளலாம்.
ஏலத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போபால், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் 5ஜி முன்னோட்ட சோதனை நடத்தியது.
இந்தியாவில் தற்போது 4ஜி பயன்பாட்டில் உள்ளது. 4ஜி-யைவிட 5ஜியின் வேகம் 10 மடங்குஅதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.