"ஜனங்கள் என்ன ஏத்துக்க மாட்டாங்கனு நினைச்சேன்!" – தனுஷ் #AppExclusive

னுஷ்…. முழுசாக மீசை முளைக்கவில்லை. இன்னமும் சதைப் பிடிக்காத ஒல்லி உடம்பு. ப்ளஸ் டூவில் ஃபெயிலாகிவிட்டு அப்பாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தலைமறைவாகத் திரிகிற பையன் போலத்தான் இருக்கிறார் டைரக்டர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ். ஆனால், ஏழெட்டு கோடி ரூபாயை இவரை நம்பிக் கொட்டத் துணிந்திருக்கிறார்கள்.

Exclusive Interview’s Dhanush

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் பரபரப்பான அறிமுகமாக வந்த தனுஷ் கையில் இப்போது நான்கு படங்கள்.’ காதல் கொண்டேன்’ படம் ரிலீஸாவதற்கு முன்பே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. ‘திருடா.. திருடி’ ஷூட்டிங்கில் மும்முரமாக இருந்த தனுஷை சந்தித்தோம்.“

சினிமால.. அதுவும் ஹீரோவா நடிக்கிற துணிச்சல் எப்படி வந்தது?”

“எனக்கு சினிமாமேல ஆர்வமே இருந்ததில்லை. அப்பாவோட படத்துல நடிக்க சரியான ஆள் கிடைக்கலை. அதனால திடீர்னு நடிக்க வந்தவன் நான். சினிமால அப்பா இருந்தும், அண்ணன் இருந்தும்கூட எனக்கு அந்த ஆசையே வந்ததில்லை!

சினிமாவில் டைரக்டர்களுக்குத் தான் பொறுப்பு அதிகம். நம்மகிட்ட ஏதாவது இருக்குனு தெரிஞ்சர், அவங்க அதை வெளியே கொண்டு வந்துடுவாங்க. அந்த நம்பிக்கையில் தான் என்னை மாதிரியானவங்க சினிமாவுக்கு வரமுடியுது. அதுசரி… இப்படி சாதாரண முகங்களை நீங்களும் எப்பத்தான் சினிமாவில் பார்க்கறது? “

“முதல் படத்தில் கொஞ்சம் ஒரு மாதிரி ரோலில் அறிமுகம் ஆகிட்டோம் என்ற கூச்சம் இருக்கா?”

‘துள்ளுவதே இளமை’தானே…. அது கண்டிப்பா செக்ஸ் படம் இல்லை. ரெண்டுங் கெட்டான் வயசுல ஸ்கூல் பசங்க என்ன பாடு படறாங்கனு சொல்ல வந்த படம்.

வெள்ளை பேப்பரில் கறுப்புப் புள்ளி இருந்தா, அவ்வளவு வெள்ளையை விட்டுவிட்டுக் கறுப்பைத் தானே மனசு பார்க்கத் தூண்டுது. அப்படித்தான் அந்தப் படமும் அதுல நிறைய செய்தி இருந்தது.

கொஞ்சம் கவர்ச்சியும் இருந்தது. தவிர, ஊரு உலகத்துல நடக்கிறதைத் தானே அதிலே காட்டினாங்க. எங்கே எது நடக்கலை! “

‘டைரக்டர்களை நம்பித்தான் இருக்கீங்க போல.. அதையும் தாண்டி உங்க திறமைகளை வளர்த்துக்க ஏதாவது திட்டம் வெச்சிருக்கீங்களா? “

” டைரக்டர்ஸ்தான் சார் எல்லாம். இப்போ ‘ திருடா திருடி’யில் பெயர் வாசு. அந்த வாசு என்ன பண்ணுவான்னு டைரக்டருக்குத்தான் தெரியும். அதனால அவர் என்ன சொல்றாரோ, அதைப் பண்றது மட்டும்தான் என் வேலை. ஏன்னா, டைரக்டரை மீறின படங்கள் எல்லாமே தோல்வியடைஞ்சிருக்கு. அதைத் தவிர தனிப்பட்ட ஹீரோயிஸம்ல எனக்கு நம்பிக்கை இல்லை! “

“உங்க படங்கள் எப்படியிருக்கணும்னு நினைக்கிறீங்க? “

“எளிமையா இருக்கணும். இயல்பா இருக்கணும். அவ்ளோதான். சூப்பர் ஹீரோ காரெக்டர்லாம் இப்போ நான் பண்ண முடியாது. குறிப்பா, ஓவர் பில்ட் – அப் கூடவே கூடாது. ஒரு படம் பார்ப்பாங்க. ரெண்டாவது படம் பார்ப்பாங்க. அப்புறம் போட்டுருவாங்க… “

Exclusive Interview’s Dhanush

“உங்களை ஜனங்க ஏத்துக்கிட்டாங்களா? “

“கண்டிப்பா ஏத்துக்கமாட்டாங்கனு தான் நினைச்சேன். ஆனால், கடவுள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வரம் கொடுப்பார். அந்தக் கருணைப் பார்வை எனக்குக் கிடைச்சிருக்கு. இப்பக்கூட என்னை ஏத்துக்கிட்டாங்களானு உறுதியாகச் சொல்ல முடியலை. ‘ காதல் கொண்டேன் ‘ வந்தா, அது தெரிஞ்சுடும்! ”

“அது எப்படிப்பட்ட படம்?” “பொண்ணுங்ககிட்ட வயசைக் கேட்கிற மாதிரி கேட்காதீங்க… அது த்ரில்லர்.

‘துள்ளுவதோ இளமை’க்கும் அதுக்கும் துளிக்கூடச் சம்பந்தம் கிடையாது. அவ்வளவுதான் சொல்ல முடியும்! ”

“இவ்வளவு சின்ன வயசிலேயே நெருக்கமான ஸீன்களில் நடிக்கத் தொடங்கிட்டீங்களே? “கிளுகிளு’வே தொழிலாப் போச்சா?”

“பொறாமைப்படாதீங்க சார்… இது பேஜாரான தொழில். சின்ன வயதில் பத்திரிகையில் நடிகர்களோட பேட்டிகளைப் படிப்பேன். இதே மாதிரி கேள்வி வரும்போது, ‘ஐயோ.. ஸீன் முடிஞ்சா போதும்னு நினைப்போம்’னு நடிகர் – நடிகைகள் சொல்லியிருக்கிறதைப் படிச்சுட்டு, ‘என்ஜாய் பண்றதைப் பண்ணிட்டுச் சொல்றதைப் பாரேன்’னு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன். ஆனால், சினிமாவில் நடிக்க வரும்போதுதான் உண்மை தெரியுது! காமிராவில் ‘கிர்’ ‘ருனு‘ ஃபிலிம் ரோல் சுத்துற சத்தம் கேட்கும்போது, ஒரு கூட்டமே சுத்தி நிக்கறபோது, வேற எதுக்கும் இடம் இருக்காது. இதைக்கூடப் படிச்சுட்டு, ‘பாரு… கதை விடறான். பாரு’னு சிரிக்கப் போறாங்க. அதுதாங்க இங்கே கஷ்டம்… உண்மையைச் சொன்னா நம்பமாட்டாங்க! “

(22.06.2003 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.