திருவனந்தபுரம்: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 2005ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி கேரளாவில் இக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, கொச்சியிலிருந்து சேலத்துக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை துப்பாக்கிமுனையில் கடத்தி பயணிகளை இறக்கி விட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நசீர், சாபிர் மற்றும் தாஜுதீன் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று என்ஐஏ நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை ஆகஸ்ட் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
