தேவை `வைத்திலிங்கம்’ ஆசி… பன்னீர் தரப்பு நிர்வாகிகள் நியமனத்தில் சர்ச்சை?!

அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பஞ்சாயத்து நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கிறது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகிய 4 பேரையும் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 22 பேரை அ.தி.மு.க-விலிருந்து நீக்குவதாக அறிவித்தார் பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ்

இப்படி மாறி, மாறி பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க-வினரைக் கட்சியிலிருந்து நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்கள். அந்தவகையில், அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்திருக்கிறார் பன்னீர்.

வைத்திலிங்கம்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கும் பன்னீர், தன் சென்னை வீட்டில் ஓய்வு எடுத்துவரும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் வைத்திலிங்கத்தின் தலையீடு மேலோங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மயிலாப்பூரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்திலிங்கம் தலைமையில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றிருப்பதும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அதில் பேசப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பன்னீர் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சிலர், “உடல்நிலை சரியில்லாமல் பன்னீர் ஓய்வில் இருப்பதால், புதிய நிர்வாகிகள் நியமனத்தை இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் வைத்திலிங்கம் தான் கவனிக்கிறார். டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமிப்பது குறித்து திட்டமிடுகிறார்.

நட்சத்திர ஹோட்டலில் நடந்த சந்திப்பில், புதிய பொறுப்புகளை எதிர்பார்க்கும் நகர, வட்ட, பேரூர், ஒன்றியக் கழக நிர்வாகிகள் பலரும், வைத்திலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினர். அவர்களின் மரியாதையை புன்சிரிப்புடன் வைத்திலிங்கமும் ஏற்றுக் கொண்டார். இது கட்சியின் சில சீனியர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சில மூத்த நிர்வாகிகள் அந்த கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.

ஓபிஎஸ் – அதிமுக

நிர்வாகிகள் நியமனம் என்பது வெளிப்படைத் தன்மையோடு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் ஒப்புதலோடு நடைபெற வேண்டும். ஆனால், ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய சந்திப்பை நடத்தி, ‘உனக்கு இந்தப் பதவி, உனக்கு அப்புறம் பார்க்கலாம்’ என்று ஏலம் விடுவதுபோல பதவிகளைப் பிரித்துத் தருவது கட்சி ஜனநாயகம் கிடையாது. எடப்பாடி அணியிலுள்ள மாவட்டச் செயலாளர்களைப் பிடிக்காதவர்கள், அந்த நிர்வாகிகளுக்கு எதிராக லோக்கலில் அரசியல் செய்பவர்கள்தான் பன்னீரைத் தேடி வருகிறார்கள். இவர்களில், யார் வலுவானவரோ, யாரால் கூட்டம் திரட்ட முடியுமோ அவர்களைக் கண்டறிந்து பதவி அளிப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால், ‘வைத்திலிங்கத்தின் காலில் விழுந்து, அவர் ஆசிப் பெற்றுவிட்டால் கட்சிப் பதவி’ என்கிற நிலை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இது, நாளடைவில் பன்னீருக்கு சிக்கலையே ஏற்படுத்தும்’ என்றனர்.

பன்னீர்செல்வமே அ.தி.மு.க-வில் இருக்கிறாரா, இல்லையா என்பது தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்தச் சூழலில், அவர் தலைமையிலான அ.தி.மு.க-வில் பதவி கேட்டு பஞ்சாயத்து தலைதூக்கியிருப்பது, கட்சியினரிடம் ஏக குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.