மேலும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்; சஸ்பெண்ட் 27ஆக உயர்வு

மேலும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் நால்வர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சேர்த்து, இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை 27 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடக்க நாளிலிருந்து ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்குவது தினசரி வாடிக்கையாகிவிட்டது என்கிற அளவுக்கு தினமும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகை இடுவது மற்றும் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்புவது ஆகியவை தொடர்கிறது. வியாழக்கிழமை பிற நாட்களை விட மக்களவை மற்றும் மாநிலங்களவை நிலவரம் சற்று வித்தியாசமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சௌத்ரி “ராஷ்டிரபத்தினி” என்கிற வார்த்தையை பயன்படுத்தி குடியரசுத் தலைவரை இழிவுபடுத்தினார் என பாஜக உறுப்பினர்கள் இரண்டு அவைகளிலும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் ஸ்மிருதி இரானி மற்றும் மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வழக்கம்போல விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி திரும்பப் பெறுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியதால், இரண்டு அவைகளும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

image
இந்நிலையில் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுசில் குப்தா மற்றும் சந்திப் பாத்தக் விதிகளை மீறி பதாகைகளை ஏந்தி முழக்கமிடுவதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் எச்சரித்தார். சுயேச்சை உறுப்பினர் அஜித் குமார் புயான் பெயரும் அவை விதிகளை மீறுவோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டது.
அமளி தொடர்ந்து அவை நடவடிக்கைகளை முடக்கிய நிலையில், மூவரையும் விதி எண் 256 அடிப்படையில் இந்த வாரம் முழுவதற்கும் இடை நீக்கம் செய்வதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். நேற்றைய தினம் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இதே விதியின் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை ஆவணங்களை கிழித்து அவைத் தலைவர் இருக்கையை நோக்கி வீசியதாக குற்றம் சாட்டி அவரை ஹரிவன்ஷ் இடைநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே விதியின் அடிப்படையில் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த சண்முகம், கனிமொழி என் வி என் சோமு, என் ஆர் இளங்கோ, கிரிராஜன்,  கல்யாணசுந்தரம் மற்றும் அப்துல்லா ஆகியோர் அடக்கம். இதைத் தவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 உறுப்பினர்கள்; தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் இவர்களுடன் சேர்த்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை இரவு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

image
மாநிலங்களவையில் திமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர் திருச்சி சிவா அவையின் துணைத் தலைவராக செயல்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி கோரிக்கை வைத்த போதும், அமளி தீர்ந்தபாடில்லை. ஆகவே மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர் ஒத்திவைப்புக்குப் பிறகு நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய மோதலால் நாடாளுமன்றம் முழுவதுமாக முடங்கியது மழைக்கால கூட்டத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே நடைபெற்று வரும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது காட்டுவதாக  கருதப்படுகிறது.

-கணபதி சுப்பிரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.