44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜூலை 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் மாலை 5.45 மணிக்கு ஐஎன்எஸ் கடற்படை விமானத் தளத்திற்கு செல்கிறார். அங்கே இருந்து, பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் பயணம் செய்து, மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வருகை தருகிறார்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர், பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக பயணித்து, இரவு 7.50 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து, அடுத்தநாள் ஜூலை 29 ஆம் தேதி காலை சாலை மார்க்கமாக பயணித்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கே காலை 10 மணி முதல் 11.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கும் பிரதமர் காலை 11.50 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி மீண்டும் அகமாதபாத் திரும்பி செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் அடையாறு ஐ.என்.எஸ் தளம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.ஜி உயர் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமானப் பாதுகாப்பு படை, விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை மாநகர உயர் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் சென்னை விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஓய்வெடுக்கும் அறையில் 45 நிமிடங்கள் இருப்பார். பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ் வழங்குவது, அவரை சந்திக்க யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடி, நிகழ்ச்சிகள் முடிந்து சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கடடுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் கார்கோ, கொரியர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அங்கேயும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு அனுமதி இல்லை. நிரந்தர ஊழியர்கள் முறையாக அனுமதி பெற்று நிரந்தர அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். இது போன்ற கட்டுப்பாடுகள் வரும் 29 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”