நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருள்கள்மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அக்னிபத் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மாநிலங்களவை எம்.பி-க்கள் 27 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்திருக்கிறார்.

இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரமாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் எம்.பி-க்களுக்கான உணவு ஏற்பாடுகள், யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான பொறுப்பு பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்காலிக வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், உணவுக்கான மெனுவில் தயிர் சாதம் முதல் கஜர் கா ஹல்வா, சிக்கன் தந்தூரி என தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில உணவு வகைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நேற்றைய, காலை… மதிய உணவு தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை உணவுக்கான மெனுவை தி.மு.க எம்.பி கனிமொழி தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அதில் இட்லி, சாம்பார் முதல் கஜர் கா ஹல்வா வரை இடம்பெற்றிருந்தன. இரவு உணவை பொறுப்பேற்ற திரிணாமுல் காங்கிரஸ் தால், பனீர், சிக்கன் தந்தூரி அடங்கிய இரவு விருந்தை வழங்கியிருக்கிறது. இன்று காலை உணவை தி.மு.க மேற்பார்வையிட்டது. அதே நேரத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி மதிய உணவை வழங்கியிருக்கிறது. 50 மணி நேரப் போராட்டத்தின் இறுதி நாளான இன்று, இரவு உணவுக்கு ஆம் ஆத்மி பொறுப்பேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது