ஸ்மிருதி இரானி மகள் குறித்த பதிவுகளை நீக்க காங். தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது மகள் குறித்த அவதூறான சமூகவலைதளப் பதிவுகளை காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் மீதும், தனது மகள் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நேட்டா டிசோஷா ஆகியோர் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருக்கின்றனர் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக நஷ்டஈடு தர வேண்டும் என்றும் சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்ணா, ‘வழக்குத் தொடர்தவரின் மீதான அவதூறு குற்றச்சாட்டின் உண்மை நிலை ஆராயப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது. இந்த ட்வீட்களால் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மூன்று பேரும், செய்தியாளர் சந்திப்பின்போது ஸ்மிருதி இரானி, அவரது மகள் மீது சொன்ன குற்றச்சாட்டுகள் தொடர்பாக ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளப் பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்தப் பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் நீக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதனை உறுதி செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஸ்மிருதி இரானி தொடர்ந்துள்ள வழக்கில் பதில் அளிக்கச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீதிமன்றத்தின் முன்னால் உண்மைகளை நிரூபிக்க நாங்கள் காத்திருக்கிறோம். சவாலை எதிர்கொண்டு இரானியின் புரட்டுகளை வெளிக்கொண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “உயர்ந்த பதவியில் உள்ள நபர் அல்லது சாமானியர் யார் மீதாவது அவதூறு கூறுவதற்கு முன்பாக உண்மைகளை ஆராய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதியை நடத்துகிறார் என்றும், ஆகையால் அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸார் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். ஆனால், இதனை ஸ்மிருதி இரானியின் மகள் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இது தொடர்பாக ஸ்மிருதியின் மகள் கீரத் நக்ராவின் வழக்கறிஞர், “கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் கோவா மதுபான விடுதிக்கு கீரத் நக்ரா உரிமையாளர் இல்லை. அவர் அதை எடுத்து நடத்தவும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை” என்று கூறியிருந்தார்

கீரத் நக்ரா கூறுகையில், “என் மீது தவறான, போலியான, அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில் பகிர்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

காங்கிரஸ் தரப்போ “சில்லி சோல்ஸ் விடுதிக்கு விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி மேலிட அழுத்தம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில்லி சோல்ஸ் உணவு விடுதியில் சட்டவிரோதமாக மதுபான விடுதி உள்ளது. அதற்கான லைசன்ஸ் 2021-ல் இறந்துபோன நபரில் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், லைசன்ஸ் பெறப்பட்டதோ ஜூன் 2022-ல் தான். 13 மாதங்களுக்கு முன்னரே இறந்த நபரின் பெயரில் எப்படி உரிமம் பெற முடியும்? கோவாவில் எல்லா உணவகங்களுக்குமே ஒரே ஒரு மதுபான விடுதிக்குதான் உரிமம் இருக்கும். சில்லி சோல்ஸ் உணவகத்தில் மட்டும்தான் இரண்டு பார்களுக்கான உரிமம் இருக்கிறது. இவையெல்லாம் மேலிட அழுத்தம் இல்லாமல் நடந்துவிடுமா?

இந்த உணவகத்தை சுற்றி பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக வெளிச்சம் இந்த விடுதியின் மீது படாமல் இருக்கவே இந்த கெடுபிடி” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியிருந்தார்

இந்த நிலையில், கடந்த வாரத்தில், தன் மீதும், தனது மகள் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு ஸ்மிருதி இரானி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், ‘‘மதுபான விடுதி நடத்த அல்லது எந்த தொழில் செய்யவோ ஜோஷி இரானி விண்ணப்பிக்கவில்லை. எங்களை களங்கப்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட தாக்குத லில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நோட்டீஸில் தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.