ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்

தெஹ்ரான்: ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் கணவனை கொலைச் செய்த வழக்கில் மூன்று பெண்களுக்கு புதன்கிழமை மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரானில் செயல்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த வாரத்தில் மட்டும் ஈரானில் 32 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். புதன்கிழமை மட்டும் 3 பெண்கள் தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது ஷோகிலாவுக்கு 25 வயது.

இந்தக் கொலைகள் எல்லாம் குடும்ப வன்முறைக் காரணமாக நடந்துள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் ஈரான் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த ஆறு மாதத்தில் மட்டும் ஈரான் 250 பேரை தூக்கிலிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவில் ஈரான் பெண்கள் மரணத் தண்டனைக்கு உள்ளாகுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தன.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி, ஈரானில் 2021-ல் மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புச் சபையும் மரண தண்டனைகளை ஈரான் அரசியல் அடக்குமுறையாகக் கையாள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.