திருமலை: தெலங்கானாவில் நள்ளிரவில் 100 அடி சுரங்கப்பாதையில் கிரேன் அறுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தெலங்கானா மாநில அரசு நாகர்கர்னூல், மகபூப்நகர், விகாராபாத், நாராயணப்பேட்டை, ரங்காரெட்டி மற்றும் நல்கொண்டா மாவட்டங்களில் உள்ள மலை பகுதிகளில் தற்போது 10 லட்சம் ஏக்கராக உள்ள பாசன வசதியை 12.3 லட்சம் ஏக்கராக அதிகரிக்க உள்ளது. இதற்காக, ஸ்ரீசைலம் அணையில் இருந்து 5 நீரேற்று நிலையங்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல, ரூ35 ஆயிரம் கோடியில் பாலமுரு- ரங்காரெட்டி நீரேற்று பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கொல்லப்பூர் அடுத்த யெல்லூரூ கிராமத்தில் நீரேற்று நிலையத்திற்கான பணியில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் இரவு 7 தொழிலாளர்கள் வேலையை முடித்து விட்டு, கிரேன் உதவியுடன் மேலே வந்து கொண்டிருந்தனர். அப்போது, 70 அடி உயரத்தில் வந்தபோது திடீரென கிரேனின் சங்கிலி அறுந்து விழுந்தது. இதனால், ஆழமான சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் விழுந்தனர். இதில், 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
