கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 80 வயது முதியவர்: பத்திரமாக மீட்பு

க.சண்முகவடிவேல்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரைச் சேர்ந்தவர் நல்லுகவுண்டர் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு வந்திருக்கிறார். திருச்சியில் கிடைக்கும் வேலையை செய்து கிடைத்த வருவாயில் சாப்பிட்டு, அப்பகுதியில் உள்ள கடை வராண்டாவில் படுத்து உறங்கி திருச்சியிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) நேற்று இரவு யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரையோரம் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறியதில் ஆற்றுக்குள் விழுந்து விட்டார். கரைபுரண்ட வெள்ளம் அவரை அடித்துச்சென்றது.

இருப்பினும், வெள்ள நீரின் போக்கில் நீச்சல் அடித்துக் கொண்டே சென்ற முதியவர் ஆற்றின் நடுவில் மின்கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையை சமயோசிதமாக பிடித்து அதில் ஏறியுள்ளார்.
பின்னர், அவர் கடும் குளிரில் நடுங்கியபடி தன்னை காப்பாற்றுமாறு சப்தம் எழுப்பினார். இதைப் பார்த்த அப்பகுதியினர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி, சக்திவேல் மூர்த்தி, சந்திரசேகர், மணிகண்டன் பிரபு உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பின் கயிறு கட்டி ரப்பர் படகில் சென்று முதியவரை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.