நாட்டில் கொவிட் தொற்று பரவலாக பரவுகின்ற போதிலும் பாடசாலைகளை மூடிவிட வேண்டாம் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கல்வி அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த கொவிட் அலையின் போது பாடசாலைகள் மூடப்பட்டதால், சில குழந்தைகள் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஒன்லைன் கல்வி முறையால் சில குழந்தைகள் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான காட்சிகளைப் பார்ப்பதில் அடிமையாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்முக நாடுகளில் கொவிட் நோய் பரவிய போதிலும், அந்த நாடுகளில் பாடசாலைகளை மூடும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கொவிட் நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது பிள்ளைகள் முடியுமானவரை சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் பாடசாலை செல்வதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை படிப்பை இடைநிறுத்துவதால் பல குழந்தைகளுக்கு மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அடிக்கடி தலைவலி, வயிற்று வலி, சோம்பல், ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு உடல் ரீதியான நோய்கள் ஏற்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.