ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் நேற்று (03) ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் பிரதிபலித்திருக்கின்றமையை வரவேற்பதாகவும், குறித்த விடயங்கள் படிப்படியாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுவதற்கு, பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

“குறித்த உரையில், எம்மால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வு மற்றும் காணிப் பிரச்சினைகள், யுத்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல் உட்பட்ட விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனை எமது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் அரசியல் அணுகுமுறைகளுக்குமான வெற்றியாகவே கருதுகின்றோம்.

இவ்வாறான சூழல்களை ஏனைய தமிழ் தரப்புக்களும் எமது மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியினால் உருவாக்க முயற்சிக்கப்படுகின்ற அனைத்துக் கட்சி அரசாங்கத்தினை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான ஆரோக்கியமான தளமாக அனைத்து தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.