​நீர்வீழ்ச்சி​ அருகே ​போட்டோ ​​ஷூட்; தவறி விழுந்த இளைஞர் மாயம்! – வனத்துறையின் அலட்சியம் காரணமா?

திண்டுக்கல் மாவட்டம், மணலூர் ஊராட்சியில் ​புல்லாவெளி ​கிராமத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் புல்லாவெளி ​நீர்வீழ்ச்சி​ ​உள்ளது​.​ ​புல்லாவெளியில் பகுதி முழுவதும் மிளகு, மலைவாழை, பலா, காபி, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர் விவசாயம் நடந்து வருகிறது.

தொங்குபாலம்

இங்கிருந்து ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்குபாலத்தை கடந்தால் புல்லாவெளியின் நீர்வீழ்ச்சி அழகை ரசிக்க முடியும். ஆனால் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கைக் கொண்ட நீர்வீழ்ச்சியில் குளிக்க வேண்டும் என்பதற்காக வனப்பகுதிக்குள் சென்று நீர்வீழ்ச்சியின் வலப்பகுதிக்கு சென்று ஆபத்தான முறையில் இளைஞர்கள் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பெரும்பாறை, மணலூர் உள்ளிட்ட வனப்பகுதிகளிலிருந்து சிறு சிறு ஓடைகளாக வந்து மணலூரில் ஆறாக உருவெடுத்து ஆண்டுதோறும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி கொண்டே இருக்கிறது. இந்த நீர்தான் திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய பகுதி மக்களின் குடிநீர் ஆதராமாக ஆத்தூரில் உள்ள காமராஜர் நீர்தேக்கத்தை வந்தடைகிறது.

நீர்வீழ்ச்சி

கடந்த ஒரு வாரமாக ​தென்மேற்குப் பருவமழை ​தொடர்ச்சியாக பெய்து வருவதால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மிகவும் ஆபத்தான பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சியான இங்கு, தண்ணீர் விழும் இடத்திலிருந்து 100 அடிக்கு அப்பால் சுமார் 1​,0​00 அடி பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். ​எப்போதும் ​வார இறுதி நாள்களில் ​அதிக கூட்டம் வருகிறது. ​​

​இந்த நிலையில், ​​தாண்டிக்குடி மலைப்பகுதியில் விவசாயம் செய்து​வரும் ​​ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அஜய்பாண்டி​ (23)​ தன்னுடைய நண்பர் கல்யாணசுந்தரத்துடன்​ (24)​ புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அப்போது, தன்னுடைய நண்பனை வைத்து மொபைல் மூலம் போட்டோ ​ஷூட்​ நடத்தியிருக்கிறார். அப்போது நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நின்றபோது கால் தவறி அருவியில் விழுந்த அஜய் பாண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

அஜய்பாண்டி

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் நேற்று அஜய் ​பாண்டியை தேடும் முயற்சியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவரின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

​இ​து குறித்து புல்லாவெளி பகுதி மக்களிடம் பேசினோம். ​“குற்றாலம், சுருளி, கும்பக்கரை போன்று, புல்லாவெளியில் உள்ள இந்த அருவி யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்தப் பகுதியை நன்கறிந்த திண்டுக்கல், மதுரை மாவட்ட இளைஞர்கள் அதிகமாக இங்கு வருகின்றனர். அவர்களை வனத்துறையினர் கட்டுபடுத்தாமல் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர்.

பள்ளத்தாக்கு

இதனால் இளைஞர்கள் பலர் மது அருந்திவிட்டு அருவியில் குளிக்கச் சென்று பள்ளத்தாக்கில் விழுந்து இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே இந்த அருவிக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அரசும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளாததே இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணமாக அமைந்து வருகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் செக்போஸ்ட் இருந்தும் அங்கு வனத்துறையினர் காவலுக்கு இருப்பதி்லை. அப்படியே இருந்தாலும் ஆபத்தான பகுதியாக உள்ள அருவிக்குச் செல்வதைத் தடுப்பதில்லை” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.