ஓசூர் அருகே 4 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ஓசூர் அஞ்சுவாடி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் ஒன்றை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், சேலம் மாவட்டம் சேஷல் வாடி பகுதியை சேர்ந்த சசிகண்ணன், பெருமாள் சாமி மற்றும் பெங்களூரை சேர்ந்த தனுஷ் என்பதும், அவர்கள் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த 4 லட்சத்து பன்னிரண்டாயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் மற்றும் டாட்டா ஏசி வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.