இசிஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டம்: மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

சென்னை: கோவளம் வடிநிலப் பகுதிகளின் கிழக்கு கடற்கரை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை கோவளம் வடிநிலைப் பகுதியில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் வாயிலாக 306 கி.மீ., நீளத்துக்கு, 1,243 கோடி ரூபாய் செலவில் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதில் பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார், கானத்தூர் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் 309 கோடி ரூபாய் செலவில் 52 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

இந்தப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிக்குள் வருகிறது. இப்பகுதியில் இயற்கையாக மழைநீர் உறிஞ்சம் நிலப்பரப்பு இருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்விலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணயைம், தேசிய கடல் வளர் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், பொதுப்பணித்துறை அடங்கிய குழுவை தீர்ப்பாயம் அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைப்படி, கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி இல்லாமல், மழைநீர் வடிகால் அமைக்க முடியாது என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தீர்ப்பாய உத்தரவுப்படி, இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் சென்னை மாநகராட்சி விண்ணப்பித்தது. இவற்றை பரிசீலனை செய்த ஆணையம், பசுமை தீர்ப்பாயத்தில் அளித்த மழைநீர் வடிகால் வடிவமைப்பு, திருபுகழ் கமிட்டியின் பரிந்துரைப்படி, மழைநீர் வடிகால் கட்டமைப்பு மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதைதொடர்ந்து மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளிக்கும்பட்சத்தில், கோவளம் வடிநிலப் பகுதியில் 3-ம் திட்ட பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.