‘தமிழகத்தின் ராஜபக்சே’ போல செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி: தினகரன்

சென்னை: தமிழகத்தின் ராஜபக்சே போன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று அமமுக பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வரும் ஆக.15-ஆம் தேதியன்று அமமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார். இனத்தை வைத்து சிங்களர்களையும் தமிழர்களையும் பிரித்து அரக்கர்கள் போல இருந்ததால்தான், இலங்கையிலிருந்து ராஜபக்சே குடும்பத்தினர் விரட்டப்படுகின்றனர். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சாதியை வைத்து பிரிவினை செய்வதால், இவரும் ராஜபக்சே போல அந்த தொண்டர்களால் விரட்டப்படுவார்.

மழைக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும், மக்களின் சொத்துக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளின் சொத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, நகர்ப்புறங்களில் பாதாள சாக்கடை, மின்சாரம் தாக்கி உயிரிழத்தல் போன்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்களை காப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.