நமது மக்களில் பலர் வரி கட்டாமல் ஏமாற்றுகிறார்களா? உண்மை என்ன?

வாரன் பஃபெட் ஒருமுறை தன் செயலாளர் தன்னைவிட அதிகம் வரி செலுத்துவதை சொல்லி, வரித் திட்டமிடல் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக் கூடியிருக்கிறார். நம்மில் பலரும் வரித் திட்டமிடலை சரியாக செய்யாமல் இருப்பதன் விளைவாக நிறைய வரி கட்டுகிறோம் அல்லது வரி எதையும் கட்டாமலே தப்பித்துவிட முடியுமா என்று பார்க்கிறோம்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் வருமான வரி கணக்குத் தாக்கல் வெகு சிறப்பாக முடிந்திருக்கிறது. வருமானத்தை சமன் செய்து, விலக்குகளைத் தவிர்த்து, செலுத்த வேண்டிய வரியை செலுத்தி, வருமானம் வரிக் கணக்கினைப் பல கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.

வருமான வரிக் கணக்கு..

வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதற்குத் தயாராகாதவர்கள், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் கடைசித் தேதி ஒத்திவைக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் தேதி ஒத்திவைக்கப்பட்டதுதான். அப்போது கோவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்ததால், வரிக் கணக்கு தாக்கல் செய்யும் கடைசித் தேதி ஒத்திவைக்கப்படது. ஆனால், இந்த ஆண்டு கோவிட் தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்திருப்பதால், வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் தேதி நீட்டிக்கப்படவிலை.

என்றாலும், இந்த ஆண்டு ஏறக்குறைய 5.8 கோடி பேர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருப்பது பெரிய சாதனைதான். கடந்த ஆண்டைவிட 72.42 லட்சம் பேர் அதிகமாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருப்பது மிகழ்ச்சி தரும் செய்தி. இன்னும் 54% பேர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமலே இருக்கிறார்கள்.

Tax (Representational Image)

இந்திய மக்கள் தொகை 130 கோடி என்று வைத்துக்கொண்டால், அதில் வருமான வரி தாக்கல் செய்கிற அளவுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் 30 – 35 கோடி வரை இருக்கலாம். இவர்களில் வெறும் 5.80 கோடி பேர் மட்டும் வரித் தாக்கல் செய்திருப்பது குறைவான சதவிகிதம்தான்.

ஆனால், இதை வைத்தே நம் மக்களில் பலர் வரி எதுவும் கட்டுவதில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவர் வரி கட்டும் அளவுக்கு வருமானம் ஈட்டாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பொருள்களை வாங்கும்போதும், சேவைகளைப் பெறும்போதும் ஜி.எஸ்.டி வரியை செலுத்தவே செய்கிறார்கள். எனவே, நம் நாட்டில் பெரும்பான்மை மக்கள் வரி எதுவும் செலுத்துவதில்லை என்பது தவறான வாதம்.

ஆனால், நம் நாட்டில் சுயதொழில் செய்துவருபவர்களும், பிசினஸ் செய்பவர்களும் தங்கள் வருமானத்தைக் கணக்கில் கொண்டுவராமலே இருப்பதால், வரி கட்டாமலே இருக்கிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் வருமானம் ஈட்டுகிற அளவுக்கு வரி கட்டுவதில்லை. பலரும் வருமானத்தை மறைத்தும், பொய்யான விலக்குகளைப் பெற்றும், செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமலும் இருப்பதால், வரி கட்டாமல் இருந்துவிடுகின்றனர். இதனால், அரசாங்கத்தை ஏய்ப்பதுடன் அரசு அளிக்கும் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கிறவர்களாக இருக்கின்றனர்.

Tax

இனிவரும் காலத்திலாவது இந்த நிலை மாறவேண்டும். ஓரளவுக்குமேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரையும் வருமான வரி கட்டுகிற அளவுக்கு விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும். மக்களும் தாங்கள் வரி கட்டுவது தங்கள் நாட்டு மக்களின் நன்மைக்கே என்பதை உணர்ந்து, தங்கள் கடமையை மறக்காமல் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம் நாட்டின் வரி வருமானம் இன்னும் அதிகமாகும்!

– சவ்பாக்யதா சு.உ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.