பதிலடிக்கு தயார் என தைவான் எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்-சீன கடற்படை தங்கள் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது, தங்கள் நாட்டு மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போல இருக்கிறது என தைவான் தெரிவித்துஉள்ளது.

நம் அண்டை நாடான சீனா, தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவான் வந்தார். அவரது வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானில் இருந்து சென்ற மறுநாளே, சீன ராணுவம் தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை துவக்கியது.

இதன் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் 11 ஏவுகணைகளை ஏவியது. மேலும், ‘ட்ரோன்’ எனப்படும் நான்கு ஆளில்லா குட்டி விமானங்களும் ஏவி விடப்பட்டன. இதுகுறித்து, தைவான் அதிபர் சாய் இங்வென் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சீனாவின் ராணுவ பயிற்சிகளை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். ‘இந்த போர் பயிற்சி நடவடிக்கைகள் எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போல் உள்ளது. இதற்கு தகுந்த பதிலடிதர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவும் தயார்!

சீனாவின் இந்த அடாவடி செயல் குறித்து பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, “சீனா பொறுப்பற்ற முறையிலும், அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்படுகிறது. தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, நான்சி பெலோசியின் வருகையை சீனா காரணமாக பயன்படுத்துகிறது. ”இதுபோன்ற செயல்களை சீனா செய்யும் என்பதை எதிர்பார்த்தோம். சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராகவே உள்ளது. தைவானை பல ஆண்டுகளாக அமெரிக்கா ஆதரித்து வருகிறது. சுதந்திரமான இந்தோ – – பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.