பிரிட்டன் பிரதமர் தேர்தல் விறுவிறு; டிவி விவாதத்தில் ரிஷிக்கு ஆதரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலையொட்டி நடந்த, ‘டிவி’ விவாதத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு கிடைத்தது. பிரிட்டனில் கொரோனா காலத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் சிக்கியதால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

இறுதிப் போட்டி

இங்கு, ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே அடுத்த பிரதமராக பதவியேற்க முடியும். இதனால் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பல சுற்றுக்களாக நடந்து வருகின்றன.

இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். செப்., 5ல் கட்சியின் 1.80 லட்சம் உறுப்பினர்கள் ஓட்டளித்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். சமீபத்தில் பழமைவாத கட்சியின் உறுப்பினர்கள் இடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் லிஸ் டிரசுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. இரண்டாவது கருத்துக்கணிப்பிலும் லிஸ் டிரசுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். ரிஷி சுனக்குக்கு 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

latest tamil news

நேருக்கு நேர் விவாதம்



இந்நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் இரண்டு பேரையும் சந்திக்க வைத்து நேருக்கு நேர் விவாதம் நடத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ‘ஸ்கை நியூஸ்’ என்ற, ‘டிவி’ சேனல் சார்பில் இந்த விவாதம் நடத்தப்பட்டது. இதில் ரிஷி சுனக்கிற்கும், லிஸ் டிரசிற்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது.

பிரிட்டனில் தற்போது நிலவும் பொருளாதார சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். ரிஷி சுனக் கூறுகையில், ”கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர்,” என்றார். லிஸ் டிரஸ் கூறுகையில், ”நெருக்கடியான நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது. துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்,” என்றார். விவாதத்தின் இறுதியில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து பார்வையாளர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக, அதிகமான பார்வையாளர்கள் கைகளை உயர்த்தினர். சமீபகாலமாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு குறைந்திருந்தது. தற்போது டிவி விவாதத்தில் ஆதரவு அதிகரித்திருப்பது, அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.