Motivation Story: சாப்பாட்டுக்காக நாயை விற்ற Sylvester Stallone; ஹாலிவுட்டின் ராக்கி பாயான கதை!

“பயிற்சி செய்யும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். அதேநேரத்தில் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்… `இப்போது கஷ்டப்பட்டால்தான் வாழ்நாள் முழுக்க நீ சாம்பியனாக இருக்க முடியும்’ என்று’’. – அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி.

ஹாலிவுட் கதாநாயகர்களில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்துவைத்திருப்பவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன். முழுப்பெயர் Michael Sylvester Gardenzio Stallone. அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களின் கண்ணில் நிழலாடுபவை. அவர் பிறப்பே பிரச்னையில்தான் தொடங்கியது. பிரசவத்தின்போது ஃபோர்செப்ஸ் (Forceps) எனப்படும் கிடுக்கி போன்ற மருத்துவக் கருவியால் குழந்தையை இழுத்தபோது, ஏதோ ஒரு நரம்பைத் தாக்கி, முகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிறந்த குழந்தைக்குப் பக்கவாதம் (!). எப்படியோ அதிலிருந்து மீண்டுவிட்டாலும், அவருடைய முகத்தின் இடப்பக்கக் கீழ்ப்பகுதி கோணலாக இழுத்துக்கொண்டது. உதடு கோணிக்கொண்டது. அதன் காரணமாக பேசுவதில் சிக்கல். வாழ்நாள் முழுக்க இந்தப் பிரச்னைகள் ஸ்டாலோனுக்குத் தொடர்ந்தன.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நடிப்பு என்றால் ஸ்டாலோனுக்கு உயிர். பள்ளி, கல்லூரி நாடகங்களில் ஆர்வத்தோடு நடித்திருக்கிறார். 1969-ம் ஆண்டிலிருந்தே சினிமாவில் தலைகாட்டத் தொடங்கிவிட்டாலும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் ஒன்றுகூட அவருக்கு அமையவில்லை. ரெஸ்டாரன்ட் ஊழியர் (Patron), சாதாரணப் படைவீரர், பார்ட்டியில் கலந்துகொள்ளும் விருந்தினர், மாப்பிள்ளைத் தோழன், ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும் சக பயணி… இப்படி உப்புச்சப்பில்லாத சைடு ரோல்கள். சினிமாவில் இப்படியென்றால், நிஜ வாழ்க்கையில் வயிற்றுப்பாட்டுக்காக கண்ட வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது. ஓர் உயிரியல் பூங்காவில் கூட்டிப் பெருக்கும் வேலை, சினிமா தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பணி… என வேலைகள். அதற்காகவெல்லாம் துவண்டுபோய்விடவில்லை ஸ்டாலோன், சினிமாவில் சாதிக்க என்ன செய்ய வேண்டும், எப்படித் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது என்பதிலேயே கவனமாக இருந்தார்.

Sylvester Stallone;

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் பழியாகக் கிடக்கும் ஓர் இடம் இருந்தது. அது உள்ளூரிலிருந்த ஒரு நூலகம். கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் படித்தார். படித்துப் படித்தே தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டார் ஸ்டாலோன். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எட்கர் ஆலன் போ. மற்றொருபுறம் வறுமை அவரைத் துரத்தித் துரத்தி அடித்தது.

ஒரு கட்டத்தில் வாடகை கொடுக்க முடியாமல் அவர் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டிலிருந்து துரத்தப்பட்டார். அப்போதெல்லாம் அவருக்குத் துணையாக இருந்தது, அவர் வளர்த்த செல்ல நாய் பட்கஸ் (Butkus). கிடைத்த இடத்தில் தங்கிக்கோண்டார். பெரும்பாலும் அவர் இரவுப் பொழுதைக் கழித்தது நியூயார்க்கிலிருந்த `போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினல்’தான். இரண்டு ஜீன்ஸ், நான்கைந்து சட்டைகள், இரண்டு ஜோடி ஷூக்கள்… இவைதான் அவரின் உடைமைகள். ஷூக்களும் நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் ஓட்டை விழுந்திருந்தன. பின்னாளில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலோன்… `எனக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று நடித்தாக வேண்டும். இல்லையென்றால், யாரிடமாவது கொள்ளையடிக்க வேண்டும். அதனால்தான் கிடைத்த ரோல்களிலெல்லாம் நடித்தேன். ஏனென்றால், அப்போது நான் வாழ்க்கையின் விளிம்பில் இருந்தேன்.’

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கொப்பாலாவின் `தி காட் ஃபாதர்’ படத்தில் ஒரு சின்ன ரோலாவாது கிடைக்காதா என்று முயன்று பார்த்தார் ஸ்டாலோன். கிடைக்கவில்லை. எல்லோருக்கும் எங்கேயோ ஒரு கதவு திறக்கக் காத்திருக்கத்தான் செய்கிறது. அந்த தினமும் வந்தது. 1975, மார்ச் 24… ஸ்டாலோனின் வாழ்க்கையை மாற்றியமைத்த தினம். அன்றைக்கு ஒரு குத்துச் சண்டையைப் பார்க்கப்போயிருந்தார். அன்றைக்கு பாக்ஸிங் செய்தவர்கள் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் முகமது அலியும், சக் வெப்னரும் (Chuck Wepner). அந்தச் சண்டை ஸ்டாலோனை வெகுவாக பாதித்தது. `குத்துச் சண்டையை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதலாமே’ என்று தோன்றியது. வீட்டுக்கு வந்தவர், அன்று இரவே கதையை எழுத ஆரம்பித்தார். மூன்றே நாள்களில் முழுக் கதையையும் எழுதிவிட்டார்.

Sylvester Stallone;

பிறகு என்ன… வழக்கமாக எல்லா திரைப்படக் கலைஞர்களும் செய்வதுபோல தயாரிப்பாளர்களைத் தேடி அலைய ஆரம்பித்தார். ஒரு மனிதர் எத்தனை தயாரிப்பாளர்களிடம்தான் ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்ல முடியும்… ஸ்டாலோன் அந்த விஷயத்தில் சலிப்படையவே இல்லை. கேட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்குமே கதை பிடித்திருந்தது. ஆனால், ஸ்டாலோன் வைத்த கோரிக்கை பிடிக்கவில்லை. ஸ்டாலோன், அந்தக் கதையில் தானே நடிக்க வேண்டும் என்றார். பல தயாரிப்பாளர்களுக்கு அன்றைக்கு அமெரிக்காவில் பிரபலமாக இருந்த நடிகர்கள் ராபர்ட் ரெட்ஃபோர்டு அல்லது பர்ட் ரெனால்ட்ஸ் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்று தோன்றியது. அதை வெளிப்படையாகவே ஸ்டாலோனிடம் சொன்னார்கள். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை.

ஒரு தயாரிப்பாளர் முகத்துக்கு நேராகவே சொன்னார்… “நீங்க எப்பிடி நடிப்பீங்க… வாயும் உதடும் கோணியிருக்கு. ஹீரோவா மக்கள் எப்படி ஏத்துப்பாங்க… இன்னொரு விஷயம்… உங்களுக்குப் பேச்சே திக்கித் திக்கித்தான் வருது எப்பிடி டயலாக் பேசுவீங்க?’’

எதற்கும் மசியவில்லை ஸ்டாலோன். தன் கதையில் தானே நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் வறுமை வயிற்றைப் பிடித்து நெருக்க, சாப்பிடக் காசில்லாமல் தான் செல்லமாக வளர்த்த நாய் பட்கஸை, மனமெல்லாம் நடுங்க விற்றார். நாயை விற்றுக் கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா… 40 டாலர்.

எப்படியோ, அரைமனதோடு அவருடைய கதையைப் படமாக்க இரண்டு தயாரிப்பாளர்கள் முன்வந்தார்கள். படம் வெளியானது. சக்கைபோடு போட்டது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட். கூடவே சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த எடிட்டிங் என மூன்று ஆஸ்கர் அவார்டுகளை வென்றது. ஸ்டாலோனுக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அந்தப் படம் `ராக்கி’ (Rocky).

ராக்கி

படத்தில் நடிக்க அட்வான்ஸ் பணம் கைக்கு வந்ததுமே முதல் வேலையாகத் தன் செல்ல நாய் பட்கஸைத் தேடிப்போனார் ஸ்டாலோன். பட்கஸை வாங்கியவர் அதற்குள் வேறொருவருக்கு விற்றிருந்தார். அதற்காக பட்கஸை விட்டுவிட முடியுமா… அவரையும் சந்தித்து, தனக்கு தன் நாய் திரும்ப வேண்டும் என்று கேட்டார் ஸ்டாலோன். அவரும் அதை விற்கத் தயாராகத்தான் இருந்தார். அதற்கு அவர் சொன்ன விலை 15,000 டாலர். பணத்தைக் கொடுத்து, தன் செல்லக்குட்டியை மீட்டுக்கொண்டார் ஸ்டாலோன். `அதைவிட அதிகம் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன். என் பட்கஸுக்கு விலை மதிப்பே இல்லை’ என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டார் ஸ்டாலோன்.

`வெற்றி பெற்ற பிறகு பழசை மறக்கக் கூடாது’ என்பார்கள். அதைக் கடைப்பிடித்ததால்தான் சில்வஸ்டர் ஸ்டாலோன் வெற்றி மேல் வெற்றி பெற்றார். இன்றைக்கும் உலக அளவில் ரசிகர்களின் நினைவில் நிற்கிறார், நிற்பார். அவர் தன் `ராக்கி’ படத்துக்குப் பெயர் வைத்தது இன்னொரு சுவாரஸ்யம். ஸ்டாலோனின் நண்பர்களும், உறவினர்களும் அவரைச் செல்லமாக அழைக்கும் பெயர் `ராக்கி.’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.