தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார். பின்னர் இல்லை என்றார். முந்தைய தேர்தலில்கூட அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பின்னர் அரசியல் வேண்டாம் எனச் சொல்லி ரசிகர் மன்றத்தை சந்தித்தார்…. ரசிகர் மன்றத்தை மாற்றினார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை இப்படித்தான் கூறி வருகிறார். தற்போதும், ஆளுநரைச் சந்தித்துவிட்டு அரசியல் ரீதியாகப் பேசினேன் எனக் கூறியுள்ளார். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், ’அரசியல் குறித்து பேசினேன்’ எனக் கூறியுள்ளார் ரஜினி. இதைப் பற்றி தெளிவான விளக்கத்தை ரஜினிதான் அளிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும். எங்களது தலைமையை ஏற்றுக் கொள்பவர்களை கூட்டணியில் சேர்ப்போம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமையை ஏற்று யார் எங்களுடன் பயணிக்க இருக்கிறார்களோ அவர்களுடன் எங்கள் கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்தான். தமிழகத்திலிருந்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்கள். நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை இங்கிருந்து செல்லும் உறுப்பினர்கள் விவாதிப்பதுகூட இல்லை.

இதற்கு உண்டான பதிலை அளிக்கும் நிர்மலா சீதாராமனின் விளக்கத்தைக்கூட கேட்காமல் வெளிநடப்பு செய்து வருகின்றனர். எந்த ஆக்கபூர்வமான விவாதத்திலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கற்பதில்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து அவரிடம் ஓ.பி.எஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஓ.பி.எஸ் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர். அவர் யாருடன் இணைந்து செயல்பட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஏனென்றால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதற்குப் பிறகு அவர் சசிகலாவுடன் இணைந்து பயணிக்கலாம், இல்லையென்றால் தி.மு.க-வுடன்கூட இணைந்து பயணிக்கலாம். அது அவரின் விருப்பம்” என்றார்.