இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்யக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,தற்போது நடைமுறையிலுள்ள மோட்டார் வாகன கட்டளைச்சட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பதிவு செய்யலாம் ஆனால் மின்சார வாகனங்களை பதிவு செய்ய எந்த ஏற்பாடும் இல்லை என்று கூறினார்.
இதுதொடர்பாக நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
08. இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தல் செய்தல்
சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இலத்திரனியல் வலுவைப் பயன்படுத்தி இயங்குகின்ற வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இலத்திரனியல் மோட்டார் முச்சக்கர ஊர்திகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காணப்படாமையால், குறித்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளை பதிவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது