நாட்டில் தற்பொழுது கொவிட் தொற்றுநோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் ,உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த தொற்றுநோய் பரவலை எதிர்கொண்டு கடுமையான நெருக்கடியில் உள்ளனர் எனவும், நமது நாட்டில் வெற்றிகரமான முறையில் தடுப்பூசிச் செலுத்தப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் குறித்த நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ள நிலையில், அந்த முறைகளை மிகவும் தீவிரமாகப் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் மற்றும் டெங்கு நோய் தொடர்பில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய கொவிட் தொற்று நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், முன்னைய தொற்று நிலைமைகளைப் போன்று நிலைமையை அதிகரிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது, மாவட்ட மற்றும் மாகாண வைத்திய அதிகாரிகள் மட்டத்தில் இருந்து ஆரம்பித்து நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
குறிப்பாக, கண்டி எசல பெரஹராவிற்கு வருகை தரும் போது சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்இ வைரஸ் ஒழிப்புக்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.