செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்வதற்கு அரசு சார்பில் மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில், பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி, அறுபதாம் குறுவை, மாப்பிள்ளை சம்பா மற்றும் செங்கல்பட்டு சிறுமணி உள்ளிட்ட நான்கு வகையான நெல் விதைகள் வழங்கப்பட உள்ளன.
ஒரு கிலோ நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படும். மதுராந்தகம் விவசாயிகளுக்கு தூய மல்லி, அறுபதாம் குருவை, மாப்பிள்ளை சம்பா 200 கிலோவும், செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம் 320 கிலோவும் வழங்கப்பட உள்ளது.
அரசு சார்பில் மானிய விலையில் நெல் விதைகளை வாங்குவதற்கு ஆதார் அட்டை மற்றும் நிலத்தின் பட்டா அடங்கல் போன்ற ஆவணங்களுடன் மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நெல்விதைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.