சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வீடியோவில் வந்து அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தார் செஸ் ஒலிம்பியாட் நாயகன் ‘தம்பி’.
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிபியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடர்பான வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க பணிகள் தொடங்கி செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வீடியோ வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோ இறுதியில் செஸ் ஒலிம்பியாட் நாயகன் “தம்பி” அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்.
தம்பி…
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்திற்கு ‘தம்பி’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரிட்டார். வெள்ளை வேட்டி, சட்டை போட்ட இந்த ‘தம்பி’ மூலம் செஸ் ஒலிம்பியாட் தொடரை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது தமிழக அரசு.
செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்ததற்கான காரணத்தை தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் விளக்கினார். “பேரறிஞர் அண்ணா அனைவரையும் தம்பி என்றே அழைப்பார். எனவேதான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என்ற பெயர் வைத்தேன்” என்று தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.