மகாராஷ்டிராவில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. புதிய அரசில் ஷிண்டே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரத்தோட், அப்துல் சதார் ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் சஞ்சய் ரத்தோட் பெண் ஒருவரின் தற்கொலை வழக்கில் தொடர்புடையவர். அப்துல் சதாரின் மகள்கள் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இருவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து மும்பை முன்னாள் மேயர் கிஷோரி பட்னாகர் அளித்த பேட்டியில், “பா.ஜ.க வாஷிங் மெஷின் போன்றது. அக்கட்சியில் சேர்ந்துவிட்டால் சுத்தமாகி வெளியில் வந்துவிடுவர்” என்று தெரிவித்தார். இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “சஞ்சய் ரத்தோட் குற்றமற்றவர் என்று முந்தைய ஆட்சியிலேயே போலீஸார் நற்சான்று வழங்கி விட்டனர். அதனால்தான் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் ரத்தோட் நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பத்தில் பா.ஜ.க-வும் ரஞ்சய் ரத்தோடை அமைச்சரவையில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்துல் சதார் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2019-ம் ஆண்டுதான் சிவசேனாவில் சேர்ந்தார். கிஷோரி பட்னாகர் தற்போது உத்தவ் தாக்கரே அணியில் இருக்கிறார்.
ஆதாரங்களை தாக்கல் செய்த ஏக்நாத் ஷிண்டே!
சிவசேனாவின் சின்னமான வில் அம்புக்கு உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பில் இன்று தேர்தல் கமிஷனில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டிருப்பதால் யாரது அணி உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தரப்பில் ஆவணங்களை தாக்கல்செய்யும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உத்தவ் தாக்கரே தரப்பில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அது குறித்து முடிவு செய்யும் வரை காத்திருக்க உத்தவ் தாக்கரே தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.