புதுடெல்லி: “ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் முன்முயற்சிகளை சரியான நேரத்தில் தாய்மொழியில் தந்து, மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் பாகுபாடின்றி சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை தன்னை சந்திக்க வந்த 2018, 2019 பேட்ச் இந்திய தகவல் சேவை அதிகாரிகளிடம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “குடிமக்களை மையப்படுத்திய மற்றும் பதிலளிக்கக்கூடிய நிர்வாகத்திற்காக மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே தொடர்ந்த உரையாடல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் கொள்கை உருவாக்கம், அமலாக்கம் மக்கள் பங்கேற்புடன் இரு வழி செயல்முறையாக இருக்க வேண்டும்
அரசுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தகவல்தொடர்புகளின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்தில், அரசின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் தகவல் தந்து அதிகாரம் அளிக்க வேண்டும். மறுபுறம், அரசுகளும் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பாகுபாடின்றி சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
இலவச கலாச்சாரம் பல மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் மோசமடைய வழிவகுத்தது. அரசு நிச்சயமாக ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஒரு சாதாரண விவசாயியின் மகன் என்ற நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது அரசியல் சாசனப் பதவிக்கு நான் உயர்வதற்கான திறவுகோல் முழுக்க முழுக்க கடின உழைப்பு, ஒரே மனப்பான்மை, தொடர்ச்சியான பயணம், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுடனான தொடர்பே. மக்களை சந்தித்து பேசியதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று குடியரசுத் துணைத் தலைவர் பேசினார்.